மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் என்கிற அதகள காம்பினேஷனில் உருவாகிவரும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு.’ ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவண்ணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
ரகுநந்தன் இசையமைக்க, காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் லேபில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக இருந்தவர், கொஞ்ச நேரம் ஒதுக்கி படம் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“இதுவொரு காமெடியான படம்.. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம்.. அதுமட்டுமில்லாமல், சினிமா பின்னணியில் எடுக்கப்படும் படம் என்பதால் பொருத்தமாக இருக்குமே என்றுதான் இந்த டைட்டிலை வச்சோம்.
இருக்கிறவங்க இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவுங்க.. இவன்கிட்ட கொடுத்தா இவன் மத்தவங்களுக்கு உதவுவான்னு நினைச்சுத்தான் கடவுள் ஒரு சிலருக்கு நிறைய கொடுத்திருக்காரு.. அதனால வச்சிக்கிட்டு இல்லைன்னு ஏமாத்தாதீங்கன்றதைத்தான் இந்தப் படத்துல ஒரு மெஸேஜா சொல்லியிருக்கோம். இந்த சீரியசான லைனை முழுக்க, முழுக்க காமெடியா சொல்லியிருக்கோம்.
இது முழுக்க முழுக்க காமெடி படம்தான். படத்தின் முதல் பாதி மதுரையிலேயும், இடைவேளைக்கு பின்னாடி சென்னைலேயும் நடக்கிற கதை இது. கதையை ரெடி பண்ணிட்டு அப்புறம்தான் இதுக்கு சிவா பொருத்தமா இருப்பார்னு கூப்பிட்டோம்..
சிவா – பவர் ஸ்டார் காம்பினேஷன் இதுல நல்லாவே ஒர்க் அவுட் ஆகிருக்கு.. இவங்க ரெண்டு பேர் காம்பினேஷன்னாலே படப்பிடிப்பில் தினசரி கலாட்டாதான்.. பவர் ஸ்டார் சீரியஸா ஒரு ரியாக்சன் கொடுத்தாக்கூட சிவாவால சிரிப்பை அடக்க முடியாமல் போயிரும்.. மதுரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர்னு ஷூட்டிங் எடுத்த பக்கமெல்லாம் பவர் ஸ்டாரை பார்க்கிறதுக்குனே ஒரு கூட்டம் வந்துடும். ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் படத்தை எடுத்திருக்கோம்.
நைனா சர்வார்(Naina Sarwar)ங்கிற பெங்களூர் பொண்ணுதான் கதாநாயகி.. தமிழ்ல நாங்கதான் அறிமுகப்படுத்துறோம்.. ஆனாலும், கன்னடத்துல ஏற்கனவே நாலு படத்துல நடிச்சிருக்காங்க.
படத்தோட இசையமைப்பாளர் ரகுநந்தனும், ஜி.வி.பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடினா நல்லா இருக்கும்னு சொன்னேன்.. பாட்டு டியூனை கேட்டதும் ஜி.வி.பிரகாஷே நான்தான் இந்த பாட்டை பாடுவேன்னு உறுதியா சொல்லிட்டு வந்து பாடியும் கொடுத்திருக்கிறார். ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஐந்தும், ஐந்துவிதமாக இருக்கின்றன.
இந்தப் படத்துக்காக பவர் ஸ்டார் சீனிவாசனை வைச்சு நாங்க வெளியிட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போஸ்டர் பலத்த சர்ச்சையை கிளப்பியிருக்கு. எம்.ஜி.ஆரை மத்த எல்லாரும் பார்க்கிறதவிட நாங்க பார்க்கிற பாய்ன்ட் ஆப் வியூ வேற.. முதல்ல எம்.ஜி.ஆர் அவர்களை சினிமாக்கரராத்தான் பார்க்கணும்.. அப்புறமாத்தான் சி.எம்.மா பார்க்கணும். நாங்க அவரை ஒரு சினிமா கலைஞரா நினைச்சுத்தான் இந்த போஸ்டரை உருவாக்கினோமே தவிர, இதுல வேற எந்த உள்நோக்கமும் இல்ல..
அந்தப் போஸ்டருக்காக இதுவரைக்கும் எந்த எதிர்ப்பும் வரலை.. இனியும்கூட வராதுன்னு நம்புறேன்.. ஆனால் போஸ்டரை பார்த்து நல்லாருக்குன்னு சொன்னாலும், எங்க பிரண்ட்ஸ் சைட்ல இருந்தே ‘கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு’ன்னும் சொன்னாங்க..
அதே சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினி ஸாரையும் நாங்க கலாய்ச்சிருக்கோம்னு வெளில நாலு பேர் சொல்றாங்க.. நிச்சயமா அப்படி எதுவுமே இந்தப் படத்துல இல்ல.. நாங்களும் சினிமாக்காரங்கதான்.. எங்களுக்கு எல்லாரும் வேணும்தான். தவிர சூப்பர் ஸ்டாரை கிண்டல் பண்ற அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் வளரலை. இது யாரையும் காயப்படுத்தாத படமா இருக்கும்.. படம் வந்ததும் உங்களுக்கே உண்மை என்னன்னு புரியும்..
அதே சமயம் ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கலை. அது முற்றிலும் பொய்யான தகவல். கோபின்னு ஒரு தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார். வரும் ஏப்ரல் 29-ம் தேதி படம் வெளியாகவிருக்கிறது..” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.










