இந்தப் படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை கௌரி கிஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மது மகேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பட தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதுவரையிலும் தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் ஜானர் டைப்பில் டைம் ட்ராவல் கதையில் ‘இன்று நேற்று நாளை’ படமும், டைம் லூப் டைப்பில் ‘மாநாடு’ போன்ற படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ‘அடியே’ திரைப்படம் அதிலும் கொஞ்சம் வித்தியாசமாக Alternative Reality-ஐ பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
மிகச் சாதாரணமான ஏழ்மை நிலையில் இருக்கும் ஜீவா என்ற ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது ஒரு கடையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறார். ஒரு நாள் தொலைக்காட்சியில் தன்னுடன் பள்ளியில் படித்த மாணவியும், தான் ஒரு தலையாய் காதலித்த பெண்ணுமான செந்தாழினியைப் பார்க்கிறார் ஜீவா.
இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றாலும், ஜீவாவின் ஒருதலை காதல் செந்தாழினிக்குத் தெரியாது. செந்தாழினி இப்போது பிரபலமான பாடகி. டிவி பேட்டியில் “யாரோ ஒரு முகம் தெரியாத நபர் ஒருவர் முதன்முதலாகத் தன்னைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவர்தான் எனது முதல் கிரஷ்..” என்று கூறுகிறார் செந்தாழினி.
இதைக் கேட்டுவிட்டு ஜி.வி.பிரகாஷ் பதைபதைக்கிறார். காரணம், அந்தக் கடிதத்தை அனுப்பியதே அவர்தான். உடனேயே கெளரியிடம் இதைச் சொல்ல வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். ஆனால் கெளரி இவரைச் சந்திக்காமல் கனடாவுக்கு கிளம்பி விடுகிறார்.
அந்த நேரத்தில் பின் தொடர்ந்து சென்ற ஜி.வி.பிரகாஷ் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் ஆழ்ந்துவிடுகிறார். இதன் பின்பு அவருடைய நினைவுகள் வேறொரு இணை உலகத்துக்குள் நுழைகிறது.
அந்த உலகத்தில் ‘ஜீவா’ என்ற ஜி.வி.பிரகாஷ் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வாங்கிய இசையமைப்பாளராக ‘அர்ஜூன்’ என்ற பெயரில் வாழ்கிறார். இவரது மனைவி அதே கெளரிதான். ‘ஜீவா’ எப்படி இங்கே இசையமைப்பாளர் ‘அர்ஜுனாக’ மாறினார்.. காதலே இல்லாத நிலையில் ‘செந்தாழினி’ என்ற கெளரி எப்படி ‘அர்ஜூன்’ என்ற ஜி.வி.யின் மனைவியானார் என்பதுதான் இந்த ‘அடியே’ படத்தின் டிவிஸ்ட்டான கதை.
ஜி.வி.பிரகாஷூக்கு மிகப் பொருத்தமான கேரக்டர்தான். பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போலவும் இருக்க வேண்டும். ஏழ்மையானவனாகவும், ஏமாற்றப்பட்டவனாகவும், காதலுக்கு ஏங்குபவனாகவும், விரகதியில் உழலுபவனாகவும், தோல்வியிலேயே உழன்று கொண்டிருப்பவனாகவும் என்று அவருடைய தோற்றத்துக்குப் பொருத்தமான கேரக்டர் ஸ்க்டெச்சை ஏற்று அதற்கேற்ப நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
Alternative Reality உலகத்தை புரிந்து கொள்ளாமல் தவிக்கும் நிலையில் அவர் காட்டும் புரியாத மாதிரியான ரியாக்ஷன்ஸ்கள் அனைத்தும் அசத்தல். பள்ளியில் காதலுக்காக ஏங்குவது.. திட்டமிடுவது.. ஒரு நிமிடத்தில் காதல் தோல்வியாவது.. நிஜவுலகத்தில் காதல் கண் முன்னே உடைவது.. இதைத் தொடர்ந்து அவருக்குள் ஏற்படும் விரக்தி என்று அனைத்தையுமே மிகச் சரியாகவே செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
‘செந்தாழினி’யாக நடித்திருக்கும் கெளரி ஜி.கிஷன் ஜி.வி.பிரகாஷின் தோற்றத்திற்குப் பொருத்தமானவர் என்பதால் அந்தக் கேரக்டருக்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பள்ளி மாணவியாக அந்த சீருடையில் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருப்பவர், பாடகியாக மாறி, பின்பு மனைவியாக ஆகும் தருணத்திலும் அது போலவே இருப்பது சிறப்புதான். படத்தில் கூடுதல் சிறப்பம்சமாக இரண்டு லிப் லாக் காட்சிகளில் நடித்தும் தன் பெயரை பதிவு செய்துள்ளார்.
படத்தை கடைசிவரையிலும் நம்மைப் பார்க்க வைப்பதற்காக பெரிதும் உழைத்திருப்பவர்கள் வெங்கட் பிரபுவும், மிர்ச்சி விஜய்யும்தான்.
நிஜவுலகத்தில் விஞ்ஞானியாகவும், Alternative Reality உலகத்தில் இயக்குநர் கெளதம் மேனனாகவும் ரவுண்டு கட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. கெளதம் மேனனாக வரும் காட்சிகளில் தன்னைத்தானே வாரிக் கொள்ளும்போது பெரிதும் சிரிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.
அதேபோல் ஜி.வி.பிரகாஷின் நண்பனாக வரும் மிர்ச்சி விஜய்யும் கிடைத்த இடங்களிலெல்லாம் நம்மை சிரிக்கவும், புன்னகைக்கவும் செய்து, வறண்டு போன நிலத்திற்குக் கிடைத்த நீராய் நல்லது செய்திருக்கிறார்.
மற்றும் அவரது நண்பர்களாய் நடித்தவர்கள், வெங்கட் பிரபுவின் அலுவலக ஊழியர்கள் என்று பலரும் தங்களுக்கான கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் அப்பா, அம்மாவாக நடித்தவர்கள் ஒரு காட்சியில், என்றாலும் சிரிக்க வைத்துவிட்டனர்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் புதுமையில்லை. அதே சமயம் பழமையாகவும் இல்லை. படத்தின் கடைசிவரையிலும் ஒளியில் பிரச்சினையில்லாமல் பார்க்க வைத்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரின் இசையும் சுமார் ரகம்தான். பாடல்களுக்கு இப்போதும் இளையராஜாதான் துணை என்பதை இந்தப் படமும் சொல்லிக் காட்டுகிறது.
படத்தின் எடிட்டர் இயக்குநருடன் அமர்ந்து தியேட்டரில் முன் வரிசையில் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி காட்சிகளை எளிய மக்களுக்கு எளிதாகப் புரியும்படி சொல்லலாம் என்று படத் தொகுப்பு செய்திருந்தால், படம் பார்த்த ரசிகர்களுக்கு இப்போதிருக்கும் குழப்பமும் வந்திருக்காது.
இந்திய விஞ்ஞான ஆய்வு மையத்தில் டைம் ட்ராவல் செய்யும் வித்தையை ஒரு செல்போன் டிவைஸாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இதைக் களவாடி சென்ற அந்த அலுவலக ஊழியர், ஜி.வி.பிரகாஷ் சந்திக்கும் விபத்தில் இறந்துவிட.. அந்த டிவைஸ் ஜி.வி.யின் கைகளுக்குக் கிடைக்கிறது. அதை அவர் தெரியாத்தனமாக யூஸ் செய்துவிட.. அவர் இன்னொரு இணைவுலகத்துக்குள் பிரவேசித்தவிட்டார்.
இதனை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக வெங்கட் பிரபுவை வைத்தே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எப்போது.. இடைவேளைக்கு பின்பு.. படம் முடிய சில நிமிடங்கள் முன்பாக.. இதுதான் இந்தக் குழப்பங்களுக்கு அடிப்படை காரணம். இதனை முன்கூட்டியே முதல் பாதியிலேயே சொல்லியிருந்தால் படத்தை ஆழ்ந்து ரசித்திருக்கலாம்.
ஆனால் இந்த Alternative Reality உலகத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மிக, மிக சுவாரஸ்யமானவை. கூடுதலாக ரசிகர்களுக்கு பெரும் சிரிப்பையும் வரவழைக்கின்றன.
நடனப் புயல் பிரபு தேவா இப்போது ஏ.ஆர்.ரஹ்மனாக மாறுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் டான்ஸ் மாஸ்டராகியிருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் ப்ளேயராகவும், சச்சின் டெண்டுல்கர் கால்பந்து வீரராகவும் மாறிவிட்டார்கள். நடிகர் அஜித் ஃபார்முலா ஒன் ரேஸராகவும், கேப்டன் விஜயகாந்த் இந்தியாவின் பிரதமராகவும் மாறியிருக்கிறார்கள் என்று அனைத்துவித உண்மைகளையும் கன்னாப்பின்னாவென்று கலைத்துப் போட்டு காமெடி செய்திருக்கிறார் இயக்குநர்.
தற்போதைய கால்பந்து சூப்பர் ஸ்டாரான ரொனால்டோ நடிகராகி, இயக்குநர் கிறிஸ்டஃபர் நோலன் மற்றும் ஷங்கருடன் இணைந்து படம் இயக்குகிறார் என்ற செய்தி.. மிகப் பெரிய உல்டாவாக தமிழ் திணிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது.. விஜய் ‘யோஹன்’ படத்தில் நடிப்பது போன்ற காட்சிகள், விஷாலும், ராதாரவி ஒன்றாக இருக்கும் புகைப்படம்.. தனுஷ் ரசிகனாக கூல் சுரேஷை காட்டுவது.. மன்சூர் அலிகானின் ‘3.0’ என்ற பட அறிவிப்பு.. நாடு முழுவதும் ட்ரோனின் பொருட்கள் டெலிவரியாவது, ஆஸ்கார் விருது பெறும் இசையமைப்பாளராக பயில்வான் ரங்கநாதனை காட்டுவது என்று படம் முழுக்க தனித்த ஒரு கற்பனை உலகத்தை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
மேலும் இயக்குநர் அட்லீயை தட்லீயாக மாற்றி, அவர் இயக்கிய படங்களாக ‘மெளன ராகம்’, ‘சத்ரியன்’, ‘சக்தே இந்தியா’ என்று உள்குத்தாய் காட்டுவது தியேட்டரையே சிரிப்பலையில் ஆழ்த்தியது.
‘கட்டி புடி… கட்டி புடிடா’ பாடலை திடீரென்று காதல் பாடலாக மாற்றிக் காட்டுவது, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் காப்பி பேஸ்ட் செய்யும் காட்சிகள் என்று இன்றைய இளசுகளை கவரும்விதத்திலும் சிற்சில பன்ச்சுகளை கொடுத்துள்ளார் இயக்குநர்.
அதோடு விடாமல், ஹூண்டாய் டூத் பிரஷ், பகார்டி டூத் பேஸ்ட், கோல்டு ஃபிளேக் டெட்டாயில், கொக்கோகோலா பாத்ரூம் கிளீனர் என்று பலவித பொருட்களுக்கு முரண்பாடான பெயர்களை வைத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
‘இன்று நேற்று நாளை’, ‘மாநாடு’ ஆகிய இரண்டு படங்களும் இதே சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்தப் படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அனைவருக்கும் புரியும்படியாக அமைந்திருந்த திரைக்கதைதான். ஆனால் இந்த ‘அடியே’ படம் சிரிக்க மட்டும் வைத்துவிட்டு திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டது.
படத்தில் 20 நிமிடங்களுக்குப் பிறகுதான் படம் நகரத் தொடங்கி நம்மையும் சிரிக்க வைக்கிறது. படம் நெடுகிலும் ஆங்காங்கே சிரிக்க வைத்தபடியே படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குநர் திரைக்கதையை எல்லாருக்கும் புரியும்விதத்தில் செய்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றிப் படமாகியிருக்கும்.
தோல்வியில் இருந்துதான் அடுத்த வெற்றி கிடைக்கும் என்பதால் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் இந்தப் படத்தின் ரிசல்ட்.. அவருடைய அடுத்தடுத்த படங்களில் மூலம் சரி செய்யப்படும் என்று நம்புவோம்..!
RATING : 3 / 5









