full screen background image

ஹர்காரா – சினிமா விமர்சனம்

ஹர்காரா – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Kalorful Beta Movement / Paradigm Pictures / Dheena Productions ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோவும், காளி வெங்கட்டும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், கவுதமி செளத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிக்காலோ பியூஸ்டர், பாலு போஸ், அம்பேத், குலோத்துங்கன், செந்தில், கயல் விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ராம் அருண் காஸ்ட்ரோ, ஒளிப்பதிவு – பிலிப் ஆர்.சுந்தர், லோகேஷ் இளங்கோவன், இசை – ராம்சங்கர், படத் தொகுப்பு – டானி சார்லஸ், கலை இயக்கம் – வி.ஆர்.கே.ரமேஷ், சண்டை இயக்கம் – ரன் ரவி, நடன இயக்கம் – விஜி சதீஷ், உடைகள் வடிவமைப்பு – அய்யலு சிவக்குமார், ஒப்பனை – இ.முத்துக்கிருஷ்ணன், வெளியீடு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இன்றைக்கு செல்போன் இல்லாத இந்தியர்களே இல்லை என்ற நிலைமை வந்திருக்கிறது. மனிதர்களிடையேயான தகவல் தொடர்பில் நவீன யுகத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு செல்போன்தான். இதன் மூலம் மனித, உறவுகள் மேம்பட்ட நிலையில் அது தொடர்பான வியாபாரமும், தொழில் வர்த்தகமும் விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இந்த செல்போனின் வருகைக்கு முன்பு நம்மை மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள வைத்தவை கடிதப் போக்குவரத்துதான். தபால்காரருக்காக கால் கடுக்க வீட்டு வாசலில் காத்திருந்த தருணங்களெல்லாம், நமது முந்தைய தலைமுறையினரிடம் சுவையான அனுபவமாக மிஞ்சியிருக்கிறது.

இந்தத் தபால்காரர்களெல்லாம் குடும்பத்தில் ஒருவராகக் கருதப்பட்ட காலமும் நம் சமூகத்தில் உண்டு. இந்தியாவில் தபால் துறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்டுவிட்டது. அப்படியொரு தபால்காரரின் கதைதான் இந்த ஹர்காரா’. ‘ஹர்காரா’ என்றால் தபால்காரர் என்றும் அர்த்தமாம்.

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மலை கிராமத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்கிறார் காளி வெங்கட். அந்த ஊர் போஸ்ட் ஆபீஸ்லேயே தங்கியிருக்கிறார் காளி வெங்கட்.

ஊர் மக்கள் பாசமாக இருந்தாலும் காளிக்கு, அந்த ஊரில் இருக்க விருப்பமில்லை. 30 வயதைத் தாண்டியும் கல்யாணம் ஆகாததால் இந்த ஊரில் இருந்து வேற ஊருக்கு போனால்தான் பெண் கிடைக்கும் என்று நினைத்து டிரான்ஸ்பர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.

அது கிடைக்காததால் ஊர் மக்களிடம் நைச்சியமாகப் பேசி அவர்களின் கையெழுத்தைப் பெற்று, “இந்த ஊருக்கு போஸ்ட் ஆபீஸ் தேவையில்லை…” என்று கடிதம் எழுதி கலெக்டருக்கு அனுப்புகிறார்.

இந்த நேரத்தில் அந்த மலை கிராமத்தையும் தாண்டி மலை மீது இருக்கும் வேறொரு கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய சூழல் காளி வெங்கட்டுக்கு ஏற்படுகிறது. இதற்காக அவர் அந்த மலைக் கிராமத்துக்கு நடந்து செல்கிறார்.

அப்போது அந்த வழியே அதே ஊருக்கு செல்லும் ‘பைத்தியக்காரன்’ மூர்த்தி மூலமாக அந்த மலைப் பிரதேசத்தின் முதல் போஸ்ட்மேன் பற்றியும், அவனது பிறப்பு, வாழ்க்கை, இறப்பு பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

அந்த முதல் போஸ்ட்மேனின் கதை என்ன..? இந்தக் கதையைக் கேட்ட பின்பு காளி வெங்கட் என்ன செய்கிறார்..? என்பதுதான் இந்த ‘ஹர்காரா’ படத்தின் திரைக்கதை.

போஸ்ட்மேனாக நடித்திருக்கும் காளி வெங்கட் தனது கதாப்பாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஊர் மக்களின் ரவுசுகளைத் தாங்கிக் கொண்டு வலம் வந்தாலும் ஊரை விட்டு ஓடியே ஆக வேண்டும் என்ற கோபத்தை கச்சிதமாக பல இடங்களில் காண்பித்திருக்கிறார்.

‘பிச்சைக்காரன்’ மூர்த்தியின் கதை சொல்லலில் கொஞ்சம், கொஞ்சமாக தன்னை இழக்கும் காளி வெங்கட், ஒரு கட்டத்தில் பார்வையாளர்களாகிய நாமே கேட்க நினைக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டு நம்முடைய பிரதிநிதியாகவே ஆகிவிட்டார்.

“4-ஜி, 5-ஜி நுழையாத இடங்களில்கூட இந்த போஸ்ட் மேன் நுழைவான்” என்று காளி வெங்கட் பேசும் வசனம், அவரைப் போன்ற தபால்காரர்களின் பெருமையை பறை சாற்றுகிறது.

இறுதிக் காட்சியில் மனம் திருந்தி தன்னுடைய பணியின் உண்மைத்தனத்தையும், அதிலிருக்கும் பெருமையையும் உணரும் காட்சியில் உண்மையான போஸ்ட்மேன்களையெல்லாம் பெருமைப்படுத்தியிருக்கிறார் காளி வெங்கட்.

படத்தில் இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோதான் இந்தப் படத்தையே இயக்கியிருக்கிறார். அவருடைய கதாப்பாத்திரம் உண்மைக் கதையுடன் இருக்கிறது என்பதாலும், 150 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது என்பதாலும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

ராம் அருணின் தனது கதாப்பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார். குறிப்பாக அவருடைய சிலம்பாட்டம் ரசிக்க வைக்கிறது. முதலில் பிரிட்டிஷாருக்கு ஆதரவு கொடுத்தவர் பின்பு உண்மை தெரிந்து எதிர்க்கும் காட்சிகளில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்.

காதலியை பார்க்கும் தருணத்தில் வரும் வெட்கத்தையும், வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு காதலியின் குடும்பத்தினரிடம் குசலம் விசாரிக்கும் காட்சிகளிலும் அந்தக் கால குறும்புகளை கொஞ்சம், கொஞ்சம் நடித்துக் காண்பித்திருக்கிறார் அருண்.

பிளாஷ்பேக்கின் கிளைமாக்ஸ் காட்சியில் நம்முடனேயே எப்போதும் இருக்கும் எட்டப்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு பரிதாபமாய் உயிரையிழக்கும் அருண் காஸ்ட்ரோவின் இறப்பு, நிச்சயம் ரசிகர்களின் மனதைத் தொடும். அப்படித்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வைக் கொடுத்து நம்மை எமோஷனலாக்கும் அந்த அம்மா, கதையைச் சொல்ல வரும் பிச்சைக்காரன்’ மூர்த்தி, திடீரென்று புல் எனர்ஜியோடு வந்து ஊர் இன்னும் கொஞ்சம் தூரம்தான் என்று சொல்லும் அந்த சிறுவன்.. பைத்தியம் போல கடிதத்துக்காகக் காத்திருக்கும் வாலிபர்.. படிக்கத் தெரியாத நிலையிலும் ஊர்த் தலைவராக காலத்தை ஓட்டும் பெரிசு. அவருக்கு ஜால்ரா போடும் உள்ளூர் அல்லக்கைகள்.. என்று படம் நெடுகிலும் கிராமத்து மனிதர்கள் குறுக்கும், நெடுக்குமாய் நடந்து நமது மனதில் அமர்ந்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பத்தில் படத்தின் ஒளிப்பதிவாளர்கள்தான் முதல் பாராட்டைப் பெறுகிறார்கள். அந்த தேனி மலைப் பகுதியின் அற்புதமான மலைப் பிரதேசங்களை அவ்வப்போது நமது கண்களுக்குக் காட்டி ஒரு முறையாவது நாம் அந்தப் பக்கம் போய் வர வேண்டும் என்ற ஏக்கத்தை நமக்குள் விதைத்திருக்கிறார்கள்.

பாடல்கள் அனைத்துமே வரிகள் மிக எளிதாக நம் காதுகளில் விழுவது போன்று இரைச்சல் இல்லாத இசையில் ஒலித்து நம் மனதை நிறைய செய்திருக்கிறது. பின்னணி இசை கதைக்குப் பொருத்தமாய் இசைக்கப்பட்டு காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.

கிராமத்து போஸ்ட் ஆபீஸை கச்சிதமாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். இறுதிக் காட்சியில் அந்தக் கொலைக் களனின் வடிவமைப்பை கச்சிதமாக செய்து கொடுத்ததால், அந்தக் கொடூரம் நம் மனதை நிறையவே தொந்தரவு செய்கிறது.

இதுவரையிலும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதாப்பாத்திரமான தபால்காரர்கள் பற்றிய கதையில், இந்தப் படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

தற்போதைய நிலைமையில் ஒரு தமிழ் சினிமாவுக்கான எந்தவொரு அடையாளப் பூச்சுகளும் இல்லாமல் ஒரு அழகியல் தன்மை கொண்ட படமாக வந்துள்ளது இந்த ஹர்காரா’ திரைப்படம்.

தபால்காரர் என்பவர் வெறுமனே கடிதத்தை கொண்டு வந்து தரும் அரசு ஊழியர் மட்டுமல்ல.. அவரை மக்கள் தங்கள் குடும்பத்திர் ஒருவராக நினைத்திருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

இந்த ‘ஹர்காரா’  படத்தைப் பார்த்தால் “சார் போஸ்ட்” என்று தபால்காரர் ஒரு காலத்தில் நம் வீட்டு வாசலில் வந்து நம்மை அழைத்த அந்த மறக்கவியலாத தருணம் நம் மனக்கண்ணில் வந்து நிற்கும்.

படத்தின் திரைக்கதை மெதுவாக சென்றாலும் காட்சிகளின்  அழகியலால் படத்தை பெரிதும் ரசிக்க முடிகிறது. கமர்சியல் சினிமாவுக்கான அடையாளங்கள் எதுவுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று அனைத்துமே யதார்த்தமாக அமைந்திருப்பது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தியாவின் பெருமைமிக்க, கம்பீரமான, பழமையான அரசு நிறுவனங்களில் ஒன்றான அஞ்சல் துறையில் அதன் அடையாளமாக இகுந்த, இருக்கும் தபால்காரர்களுக்கு இப்படம் சமர்ப்பணம்.!!!

RATING : 3.5 / 5

Our Score