கோச்சடையானுக்குக் கொடுத்த கடன் தொகையை ரஜினிதான் பெற்றுத் தர வேண்டும் – தனியார் நிறுவனம் வேண்டுகோள்..!

கோச்சடையானுக்குக் கொடுத்த கடன் தொகையை ரஜினிதான் பெற்றுத் தர வேண்டும் – தனியார் நிறுவனம் வேண்டுகோள்..!

‘லிங்கா’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ‘கோச்சடையான்’ படத்தின் விவகாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் விநியோக உரிமையில் மோசடி செய்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆட் பீரோ நிறுவனம் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 3-டி அனிமேஷன் திரைப்படம் ‘கோச்சடையான்’. இப்படத்தை விநியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டதாக சமீபத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலத்தில் ஆட் பீரோ என்னும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.

ஆனால், லதா ரஜினிகாந்த் மீதான இந்த மோசடி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளரான மீடியா ஒன் குளோபல் நிறுவனம் விளக்கம் தெரிவித்திருந்தது. அதில், ‘இப்படத்தின் எந்தவித பரிவர்த்தனைகளிலும் திருமதி லதா ரஜினிகாந்த் எப்போதும் தலையிட்டதில்லை’ என்று தெரிவித்தாலும், ஆட் பீரோ நிறுவனத்திடமிருந்து தங்களது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பெற்ற கடனுக்கு லதா ரஜினிகாந்த் காப்புறுதி மட்டுமே அளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட அந்த 10 கோடி ரூபாய் தொகையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு பெற்றுத் தர வேண்டும் என ஆட் பீரோ நிறுவனம் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நாகர், மதுபாலா இருவரும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் பேசும்போது, “கோச்சடையான்' திரைப்படம் கடந்தாண்டு மே மாதம் ரிலீஸானது. இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக மீடியா ஒன் நிறுவனம் எங்களிடம் 10 கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. மீடியா ஒன் நிறுவனத்துக்காக கடன் ஒப்பந்தத்தில் லதா ரஜினிகாந்த்தும் ஜாமீன் கையெழுத்திட்டார். படம் வெளியானதும் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவதாக உறுதியளிக்கவும் செய்தார். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

நாங்கள் கொடுத்த 10 கோடி ரூபாய்க்க்கு 12 சதவீதம் கமிஷன் மற்றும் வட்டியுடன் மொத்தம் 15.84 கோடியை அவர்கள் திருப்பித் தரவேண்டும். ஆனால் இதுவரை 9 கோடியை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 6.84 கோடி ரூபாயை தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு சரியான பதிலை கூற மறுக்கிறார்.

இதற்காக நாங்கள்தான் அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும். மாறாக அவர்கள் எங்கள் மீது வழக்கு போட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பேயே இந்தப் பிரச்சினையை ரஜினி ஸாரின் கவனத்துக்கு கொண்டு போக நினைத்தோம்.  ‘இந்த சின்ன பிரச்சினைக்கெல்லாம் அவரிடம் பேச வேண்டாம்' என்று லதா ரஜினிகாந்த் எங்களிடம் கூறினார். அதனால் அப்போது ரஜினி ஸாரை நாங்கள் இதில் இழுக்கவில்லை. ஆனால் இப்போதுவரையிலும் எங்களது கடனுக்கான பதில் வராததால் பொறுமையிழந்துதான் இப்போது பேட்டியளிக்க வந்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு எங்களது பணத்தை பெற்றுத் தர வேண்டும்..” என்று கூறினார்கள்.

'லிங்கா' விநியோகஸ்தர்கள் ரஜினியை பல்வேறுவிதமாக முற்றுகை செய்து நஷ்டஈட்டுத் தொகையை வாங்கிவிட்டதை பார்த்துவிட்டுத்தான் இந்த நிறுவனத்தினரும் இப்போது திடுக்கென்று இப்படி களத்தில் குதித்துள்ளனர்.

அடுத்து இதற்காக இவர்கள் என்ன மாதிரியான போராட்டத்தைத் துவக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை..?