புத்தகப் புழுவாக இருப்பவர்களும், நாட்டு நடப்பு பற்றிய அக்கறை கொண்டவர்களும், சிறந்த பேச்சாளர்களுமாய் இருக்கும் நடிகர்களே அமைதியாய் இருக்கும்போது சில நடிகைகள் துணிச்சலுடன் மத்திய அரசை விமர்சித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
கொரோனாவின் தாக்குதலினால் தற்போது நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். நோயின் தாக்குதலைவிடவும், இதற்கான சிகிச்சை முறைகள் அரசுகளால் சரியாகச் செய்யப்படாததால்தான் இவர்கள மரித்திருக்கிறார்கள் என்பது உண்மை.
இப்படியொரு இழப்பை சந்தித்திருக்கும் நடிகை நிலா இது குறித்து காட்டமாக மத்திய அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்கிறார்.
தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘ஜாம்பவான்’, ’லீ’, ‘மருதமலை’, ‘காளை’, ’கில்லாடி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் ‘நிலா’ என்ற மீரா சோப்ரா. இவருடைய உறவினர்கள் இரண்டு பேர் கொரோனாவால் இறந்துவிட்டார்களாம்.
இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், “என் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டார்கள். ‘கொரோனாவுக்கு பலியானார்கள்’ என்று சொல்வதைவிடவும் ‘சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் பலியாகிவிட்டார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
என் முதல் உறவினருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்கவில்லை. இரண்டாவது உறவினருக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஞன் கிடைக்கவில்லை. அதனால்தான் இரண்டு பேருமே உயிரிழந்தனர்.
இப்படி எனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகளைப் போல இன்னும் பலரது உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவை சரிவர ஏற்பாடு செய்யப்படவில்லை. இதெல்லாம் கிடைக்காத நிலையில் நான் ஏன் ஜிஎஸ்டி வரியை மட்டும் சரியாகக் கட்ட வேண்டும்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொரு பக்கம் தனுஷ் ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்திருக்கும் அமைரா தஸ்தூரும் அரசுகளைக் கண்டித்துள்ளார்.
இவர் எழுதியுள்ள பதிவில், “இந்தியாவில் தற்போது அனைவருக்கும் சரியான மருத்துவ வசதி இல்லை. கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து தப்பிக்க போதுமான மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், மருத்துவமனைகள் கிடைக்காமலேயே பலரும் மரணித்து வருகிறார்கள்.
உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் ெந்பதில் துளியில் அக்கறையில்லாமல் மத்திய அரசு காட்டிய மெத்தனப் போக்கே இந்த நிலைக்கு காரணம்.. இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது..” என்று கூறியுள்ளார்.
தமிழ், மலையாள நடிகையான ஓவியாவும் தன் பங்குக்கு “இந்தியாவில் தற்போது நடப்பது ஜனநாயகமா அல்லது ஜனநாயகம் என்ற பெயரில் காமெடியா…?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
“கொரோனாவை தடுக்கும் பணியில் பிரதமர் மோடி தவறிழைத்துவிட்டார்” என்று சொல்லி டெல்லி முழுவதும் நேற்றைக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்தப் போஸ்டர்களை ஓட்டிய, வெளியிட்ட 17 பேரை நேற்றைக்கு டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து இதனை டிவிட்டரில் ‘ArrestMeToo’ என்று ஹேஸ்டேக்காகவும் பரப்பிவிட்டார்கள்.
இந்த ஹேஸ்டேக்கை முன் வைத்து நடிகை ஓவியா தனது டிவீட்டில் “Is this democracy or democrazy ??? #ArrestMeToo” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல முன்னணி நடிகர்களே நாட்டு நிலைமையைப் பார்த்தும் அமைதியாய் இருக்கும்போது இந்த நடிகைகள் இதைப் பற்றிக் குரல் உயர்த்தி பேசியிருப்பது அனைவராலும் ஆச்சரியமாய் பார்க்கப்படுகிறது.