full screen background image

“எனது ஞானத் தந்தையை இழந்துவிட்டேன்” – எழுத்தாளர் கி.ரா.வுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி..!

“எனது ஞானத் தந்தையை இழந்துவிட்டேன்” – எழுத்தாளர் கி.ரா.வுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி..!

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர். சாகித்ய  அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். கி.ரா.’ என்று தமிழக மக்களால் அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’  போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன் அவர்கள் தமது 99-வது வயதில் நேற்று நள்ளிரவில் மறைந்தார்.

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான் பிறந்த பத்து மாதங்களில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ‘ஞானத் தந்தை’ 99 வயது வாழ்ந்த  கி.ரா. அவர்களை இழந்து விட்டேன். கி.ரா. அவர்களும், அவரது மனைவியான மறைந்த கணவதி அம்மாளும், எனக்கு இன்னொரு தாய் தந்தையராக இருந்தவர்கள்.

எனக்கும், அவருக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தப்பட்ட பல விழாக்களுக்காக நான் பாண்டிச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

 
Our Score