full screen background image

ஜனவரி 24-ல் திரையுலகத்தினருக்கு திரிஷா கொடுக்கும் பார்ட்டி..!

ஜனவரி 24-ல் திரையுலகத்தினருக்கு திரிஷா கொடுக்கும் பார்ட்டி..!

இந்த வாரம் மீடியாக்களை சந்தித்து தனது அடுத்தக் கட்ட திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.

அப்போது திரிஷாவின் கல்யாணம் பற்றியும் பேச்சு எழுந்தது. மீடியா அவரது வாயைக் கிளற டி.எஸ்.பி.யும், பேச்சோடு பேச்சாக, “ஆமா ஸார்.. எனக்கும்கூட ஒரு அழைப்பு வந்திருக்கு. 24-ம் தேதி ஏதோ பார்ட்டி இருக்கு.. வாங்கன்னு சொல்லியிருக்காங்க..” என்றார்.

“அப்படியா..? எங்களுக்கு தெரியாதே..? நல்ல நியூஸாச்சே..?” என்று ஒட்டு மொத்த மீடியாவும் கோரஸ் பாட.. பட்டென்று சுதாரித்தவர், “ஐயையோ.. இதையெல்லாம் வெளில சொல்லக் கூடாது. விட்ருங்க.. இது ஆஃப் தி ரிக்கார்டு..” என்று சொல்லி நழுவிக் கொண்டார்.

ஆனாலும் இப்போது திரிஷா தரப்பே இப்படியொரு செய்தியை பகிரங்கமாக வெளியில் சொல்லிவிட்டதால் நாமும் அன்று நடந்ததை இன்றைக்கு சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறோம்.

திரிஷா திரையுலகுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைந்து, 13-வது வருடம் நடக்கிறது. ஆரம்ப காலத்தில், அவர் கதாநாயகிகளுக்கு தோழியாக துணை வேடங்களில் நடித்தார். பிரியதர்ஷன் டைரக்டு செய்த ‘லேசா லேசா’ படத்தில், கதாநாயகியாக அவர் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அவர் இருந்து வருகிறார். தமிழில் வெளிவரவிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் திரிஷாவுக்கு 25-வது படமாகும்.

இவருக்கும், தொழில் அதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிய இருக்கிறது. 

சமீபத்தில் இரண்டு பேரின் பெற்றோர்களும் செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் சந்தித்து பேசினார்கள். அப்போது, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை திரிஷாவின் கை விரலில், வருண் மணியன் அணிவித்தார். திரிஷாவும், பதிலுக்கு வருண் மணியனுக்கு மோதிரம் அணிவித்தாராம்.

இந்த நிலையில் தனக்கும், வருண் மணியனுக்கும் வருகிற 23-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக திரிஷா 2 நாட்களுக்கு முன்பாக டிவீட்டரில் அறிவித்தார். இது, 2 குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நிகழ்ச்சி என்று அவர் கூறினார். நிச்சயதார்த்தத்தின்போது, திரிஷா-வருண் மணியன் திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது.

திருமணத்தையொட்டி, திரிஷா திரையுலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்து இருக்கிறார். கடந்த 12 வருடங்களாக தனக்கு ஆதரவு கொடுத்த பட அதிபர்கள், நடிகர்-நடிகைகள் ஆகியோரை அந்த விருந்துக்கு அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்.

இந்த விருந்து நிகழ்ச்சி, வருகிற 24-ந் தேதி அதாவது நிச்சயத்தார்த்தம் முடிந்த மறுநாள் இரவு 7 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட்சோழா நட்சத்திர ஓட்டலில் நடக்கிறதாம். விருந்துக்கு வரும் அனைவரையும் திரிஷாவும், வருண் மணியனும் ஜோடியாக நின்று வரவேற்க இருக்கிறார்கள்.

திரிஷாவுக்கு திருமண நிச்சயத்தார்த்த பரிசாக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு கலர் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பரிசாக அளிக்கவுள்ளாராம் மணமகன் வருண் மணியன்.

கூந்தல் உள்ள மாமி அள்ளியும் முடிவாள்; கொண்டையும் போடுவாள். நமக்கென்ன..?

Our Score