கூகிளாண்டவரிடம் இந்திய ஆண்கள் அதிக அளவில் தேடிய பெண்களில் ஒருவர் நடிகை சன்னி லியோன்.
பல ஹிந்திப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருக்கும் இவரை தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தும் இதுவரையிலும் அது வெற்றிகரமாக முடியவில்லை.
இப்போது அதனை வெற்றிகரமாக்க முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
2009-ம் ஆண்டு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கி தமிழ்ச் சினிமாவுலகத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாகா’ ஆகிய படங்களை இயக்கினார்.
தற்போது அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதற்கடுத்து இவர் இயக்கவிருக்கும் படத்தில்தான் சன்னி லியோன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலனின் சில நண்பர்கள் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்களாம்.
இது தொடர்பாக சமீபத்தில் நடிகை சின்னி லியோனை நேரில் சந்தித்து கதை சொல்லி, ஓகே வாங்கிவிட்டாராம் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
“நாட்டில் கொரோனா பாதிப்பு இனிமேல் குறையுமானால் இத்திரைப்படம் வரும் செப்டம்பரில் துவங்கும்…” என்கிறார் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்.
சன்னி லியோனை தமிழுக்கு அழைத்து வர பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ‘வீரமாதேவி’ என்ற படத்தில் அவர் நடிப்பதாகவும் இருந்தது. பின்பு அது காணாமலேயே போனது. ஆனால், சன்னி லியோன் மலையாளத்தில் 2 படங்களில் நடித்துவிட்டார்.
இந்த நிலையில் சன்னி லியோன் தமிழில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.