`சுந்தரா டிராவல்ஸ்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ராதா தனது கணவர் என்று சொல்லும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக மீண்டும் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், “கடந்த மே மாதம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எனது கணவரான காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா மீது புகார் கொடுத்தேன். ஆனால் அந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
உதவி ஆய்வாளர் பாரதி என்னையும் வசந்தராஜாவையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். இனிமேல் ஒன்றாக இணைந்து வாழ்வதாக கூறி வசந்தராஜா எழுதி கொடுத்தார். ஆனால் தற்போது மீண்டும் என்ன கொடுமைபடுத்துகிறார்.
“என்ன பற்றி புகார் கொடுத்தால் என்ன செய்ய முடியும்..?” என கொலை மிரட்டல் விடுக்கிறார். “உதவி ஆய்வாளர்கள் பாரதியும், இளம்பரிதியும் என்னுடைய ஆட்கள். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது” என கூறி மிரட்டி வருகிறார். “காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளீர்கள்.. ஏன் இப்படி செய்கிறீர்கள்..?” என கேட்டால் தொடர்ந்து மிரட்டுகிறார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்னுடைய புகார் குறித்தும் வசந்தராஜா எழுதி கொடுத்த கடிதத்தை கேட்டேன். ஆனால் கடிதத்தை தரவில்லை. சட்டத்திற்கு முரணாக நடந்து கொண்ட உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன அடித்து துன்புறுத்திய உதவி ஆய்வாளர் வசந்த ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்குது கதை..!









