பாலிவுட் நடிகர் அமீர்கானும், அவரது மனைவியான கிரண் ராவும் விவகாரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
1965-ல் பிறந்த நடிகர்அமீர்கானுக்கு தற்போது வயது 56. இவருடைய முதல் திருமணம் இவருடைய 21-வது வயதில் 1986-ம் ஆண்டு ரீனா தத்தா என்பவருடன் நடைபெற்றது. இவர் மூலமாக அமீர்கானுக்கு ஜீனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். 2002-ம் ஆண்டு தனது மனைவி ரீனா தத்தாவை அமீர்கான் விவகாரத்து செய்தார்.
அதன் பின்பு 2005-ம் ஆண்டு தான் தயாரித்து, நடித்த ‘லகான்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை அமீர்கான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஆஸாத் ராவ் கான் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அமீர்கான்-கிரண் ராவ் இருவரும் ஒருமித்த மனதோடு விவகாரத்து செய்வதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகளில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இணைந்து வாழ்ந்தோம். எங்களுடைய நட்புறவு நாளுக்கு நாள் வளர்ந்து ஒருவர் மீது ஒருவர் காதலையும், மரியாதையையும் வைத்திருந்தோம்.
இப்போது நாங்கள் இருவருமே எங்களுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் துவக்கவுள்ளோம். இனிமேல் நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் எங்களுடைய பையனுக்கு பெற்றோராக மட்டுமே இருக்கப் போகிறோம்.
கடந்த சில காலமாகவே பிரிந்துவிடலாம் என்று திட்டமிட்டு வந்தோம். இப்போதுதான் அதற்கு சரியான நேரம் கிடைத்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இனிமேல் நாங்கள் இருவரும் தனித்தனியாக அவரவர் வாழ்க்கையை குடும்பத்தினருடன் கழிப்போம்.
எங்களுடைய ஒரே மகனான ஆஸாத்திற்கு பெற்றோராக எங்களது கடமையைத் தவறாமல் செய்வோம். அவனை நல்லவிதமாக வளர்த்தெடுப்போம். அதேபோல் இனி வரும் காலங்களில் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றுவோம். எங்களுடைய பாணி பவுண்டேஷன் தொடர்பான பணிகளிலும் இணைந்து செயல்படுவோம்.
எங்களுடைய உறவைப் புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த எங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது நன்றி.
எங்களது நலம் விரும்பிகளிடம் அவர்களது வாழ்த்துகளை நாங்கள் கோருகிறோம். இந்த விவகாரத்து என்பது எங்களதை வாழ்க்கை முடிவுறுவதை சொல்வது அல்ல.. இது எங்களது புதிய வாழ்க்கையின் தொடக்கம்.!” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.