ஏராளமான படங்களில் கவர்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா.
‘பத்து பத்து’, ‘மிருகம்’, ‘அழகர் மலை’, ‘வீரசோழன்’, ‘சோக்காளி’, ‘ஒன்பதுல குரு’ போன்ற படங்களிலும், சில மலையாளப் படங்களிலும் கவர்ச்சியின் எல்லையையே தொட்டுக் காண்பித்தவர் சோனா. தமிழ்த் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘குசேலன்’ படத்திற்கு மண்டபகப்படி சாத்தியதில் சோனாவுக்கு பெரும் பங்குண்டு. இப்போதும் யூடியூபில் இவரது கவர்ச்சியான வீடியோக்கள் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றன.
இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்தார். வெங்கட் பிரபுவிடம் பணம் கொடுத்து ஏமாந்த சர்ச்சைகள், எஸ்பிபி சரணுடனான மோதல் என்று கோடம்பாக்கத்தில் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டி வைத்துவிட்டு இடையில் ஓய்வெடுத்தவர் இப்போது மறுபடியும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இடையில் விழுந்த இடைவெளி பற்றியும், தனது திரையுலக எதிர்காலம் பற்றியும் பேசிய சோனா, “நானும் அப்படி, இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலும் அனைத்து பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். இப்போது கவர்ச்சியாக நடித்து எனக்கு மிகவும் போரடித்துவிட்டது. இனி அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். பேசப்படக் கூடிய கேரக்டர் ரோல்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறேன்..” என்றார்.
மேலும், “கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர் என்று வரும்போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள்.. நான் நல்ல கேரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன்..” என்று இயக்குநர்களுக்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு யாரேனும் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தால், அதற்கு சோனா எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!