full screen background image

சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றார் நடிகை ரேவதி

சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றார் நடிகை ரேவதி

நடிகை ரேவதி மலையாள படமான ‘பூதகாலம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார்.

39 ஆண்டுகளுக்கு முன்பு 1983-ம் ஆண்டு ‘கட்டத்தே கிளிக்கூடு’ என்ற திரைப்படத்தில் மலையாளத்தில் அறிமுகமான ரேவதிக்கு, கிடைத்திருக்கும் முதல் மலையாள மொழிக்கான விருது இதுவேயாகும்.

ரேவதி நடித்த ‘பூதகாலம்’ என்ற மலையாளத் திரைப்படம் சோனி லைவ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. படத்தில் ‘ஆஷா’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ரேவதி. ராகுல் சதாசிவன் இயக்கியிருந்த இத்திரைப்படம் அமானுஷ்யம் சம்பந்தப்ப திகில் கதையாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விருது பெற்றது குறித்து ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எழுதியிருக்கிறார்.

அதில், “கேரளா மாநில திரைப்பட விருது குழுவினருக்கு எனது நன்றி. ஆஷா தம்பியாக கட்டத்தே கிளிக்கூடு’ படத்தில் நடித்தேன். இப்போது வெறும் ஆஷாவாக ‘பூத காலத்தில்’ நடித்திருக்கிறேன். இடையில் 39 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது எனது முதல் கேரளா ஸ்டேட் பிலிம் அவார்ட். இவ்விருதுக்காக என்னைத் தேர்வு செய்த குழுவினருக்கு நன்றி” என்று சொல்லியிருக்கிறார்.

பாரதிராஜாவின் ‘மண் வாசனை’ திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ரேவதி. 1980, 1990-களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தார்.

இதுவரையிலும் நடிகை ரேவதி சிறந்த நடிகைக்கான 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். முதல் விருதாக தேவர் மகன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.

இதன் பின்னர், ‘மிட்ஆர் மை பிரண்ட்’, ‘ரெட் பில்டிங் வேர் த சன்செட்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் நடிகை ரேவதி.

நடிகை என்பதையும் தாண்டி, இயக்குநர், திரைக்கதையாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி, எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ரேவதி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score