1980-களில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டிப் பறந்த திரை நட்சத்திரங்களில் ஒரு சிலர் வருடாவருடம் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள். தங்களுக்குள்ளேயே கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நடிகை சுஹாசினியும், நடிகை லிஸியும் முன்னின்று நடத்தும் இந்தச் சந்திப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் இன்றுவரையிலும் நடித்து வரும் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள்.
நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, கே.பாக்யராஜ், பானுசந்தர், சுமன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான், ராஜ்குமார் சேதுபதி, நரேஷ், ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராப்.. மற்றும்

நடிகைகள் லிஸி, குஷ்பூ, சுஹாசினி, சுமலதா, ராதிகா, சரிதா, ராதா, அம்பிகா, நதியா, பூர்ணிமா பாக்யராஜ், மேனகா, பார்வதி ஜெயராம், பூனம் தில்லான், ரேவதி, ஷோபனா ஆகியோர் வருடா வருடம் கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அதே 1980-களில் தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய ஹீரோயினாக இருந்த நடிகை ரேகா இதுவரையிலும் கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நானும் 1980-களில்தான் நடிக்க வந்தேன். 80-கள் நட்சத்திரக் கூட்டத்தில் இப்போது இருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுடன் நானும் பல்வேறு மொழிகளில் இணைந்து நடித்திருக்கிறேன்.
ஆனால், என்னை அவங்க கூப்பிடலை. ஏன் கூப்பிடலைன்னு எனக்குத் தெரியாது. கூப்பிட்டிருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேன்.
ஆனால், ராதிகா மேடம், ‘1980 நடிகர், நடிகைகளின் சங்கமம்’ அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது நானும் கலந்து கொண்டேன். என்னுடன் இன்னும் நிறைய நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டார்கள்.
பட், அழைப்பு இல்லாததால்தான் நான் 80-களின் நட்சத்திரங்களின் குழுவில் நான் இல்லை..” என்று சொல்லியிருக்கிறார்.