full screen background image

நடிகை ரம்பாவிடம் கோடிகளை ஏமாந்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் சோகக் கதை..!

நடிகை ரம்பாவிடம் கோடிகளை ஏமாந்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் சோகக் கதை..!

நடிகை ரம்பா நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தனது சகோதரருடன் இணைந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்தார். இதற்காக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் 4 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தார்.

இந்தக் கடன் தொகையைத் திருப்பிக் கேட்டபோது மாணிக்கம் நாராயணன் மீது அவதூறு புகார் அளித்து போலீஸில் மாணிக்கம் நாராயணனை கைது செய்ய வைத்து.. போலீஸ் ஸ்டேஷனில் அவரை மிரட்டி பணிய வைத்து வெறும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய்தான் வாங்கியதாக எழுதி வாங்கி பிரச்சினையை முடித்துச் சென்றாராம் ரம்பா.

“இதற்கு அப்போதைய சென்னை மாநகர காவல்துறையும், தமிழக அரசும் உடந்தையாக இருந்ததாகப்” புகார் சொல்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நடிகை ரம்பாவுக்கு 4 கோடி ரூபாயை கடனாக கொடுத்திருந்தேன். அவங்க அதைத் திருப்பித் தரலை. போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ரம்பா, 3 கோடியே 50 லட்சம் ரூபாயைத் தருவதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஆனால், அதன் பின்பும் சொன்ன தேதியில் அவர் பணம் தரவில்லை. இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலைமையில் திடீரென்று என் மீது ஒரு பொய்யான புகாரை போலீஸில் அளித்தார்.

நான் லண்டனில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்திலேயே என்னை கைது செய்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார்கள். அங்கே என்னை மிரட்டினார்கள். ரம்பா கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு சமரசமாக போகும்படி சொன்னார்கள்.

ஆனால் நான் பயப்படவில்லை. “என்னைக் கைது செய்யுங்கள். சிறைக்குக் கொண்டு செல்லுங்கள். நான் தயார்…” என்றேன். நான் சாப்பிடவும் மறுத்துவிட்டேன். போலீஸ்காரர்கள் என்னைக் கெஞ்சினார்கள். “சாப்பிடுங்க ஸார்.. சாப்பிடுங்க ஸார்…” என்றார்கள். நான் “முடியவே முடியாது…” என்றேன்.

என்னை வெளியிலும் விட மறுத்தார்கள். வாசலில் பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். விவகாரம் வெளியில் வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

எனது வழக்கறிஞரை வரவழைத்து அவருடன் பேச வைத்தார்கள். ரம்பா அப்போது தருவதாகச் சொன்ன தொகை 1 கோடியே 60 லட்சம் ரூபாய். என்னை அப்படி, இப்படி என்று மிரட்டி இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு போகும்படி டார்ச்சர் செய்தார்கள்.

எனக்கு அந்த நேரத்தில் வேறு வழி தெரியவில்லை. எதையும் செய்யவும், யோசிக்கவும் முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் கிட்டத்தட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாயைவிட்டுக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தேன்.

எங்கிருந்தோ வந்த அரசியல் பிரஷர் காரணமாகத்தான் போலீஸார் அன்றைக்கு என்னிடம் அப்படி நடந்து கொண்டார்கள். நான் மட்டும் அந்தச் சமயத்தில் நடந்ததையெல்லாம் வெளியில் சொல்லியிருந்தால் அப்போதைய ஆட்சியே கவிழ்ந்திருக்கும்.

நல்ல விஷயங்களுக்கு அரசியலைப் பயன்படுத்தலாம். ஆனால் இது போன்று ஒரு தனி மனிதனை ஏமாற்றி அபகரிக்கும் நோக்கத்திற்கு அரசியல்வாதிகள் துணை போகலாமா..?” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

Our Score