full screen background image

“உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..?” – ‘சித்தி’ ராதிகாவின் கோபம்..!

“உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..?” – ‘சித்தி’ ராதிகாவின் கோபம்..!

கடந்த 3 நாட்களாக தமிழ்ச் சினிமாவில் ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கிறார்.

“அந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கக் கூடாது…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, கவிஞர் தாமரை, தோழர் தியாகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், திருமாவளவன், இயக்குநர் வ.கெளதமன், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பல முக்கிய சினிமா பிரபலங்களும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகையான ‘சித்தி’ ராதிகா.. “இது போன்று விஜய்சேதுபதியை நடிக்கக் கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது…” என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள ‘சித்தி’ ராதிகா, “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என்று துள்ளுபவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..? ஏன் இவர்கள் சன் ரைஸர்ஸ் குழுவின் தலைமை கோச்சாக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை.. அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..? விஜய் சேதுபதி ஒரு நடிகர்.  நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தி வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் 2 செய்திகளை டிவீட்டரில் போட்டுள்ளார் சித்தி ராதிகா.

அதில், “சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை சேர்க்காமல் தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?

நான் அந்த ட்வீட்டை இட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலையான தன்மையோடு தொழில் செய்பவர்களுக்கு சாட்சியாக இருக்கும் சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்..” என்று கூறியுள்ளார்.

இதற்கு அவரது குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பதில் என்னவோ..?

Our Score