நடிகை ராதிகா சரத்குமாருக்கு ‘நடிகவேள் செல்வி’ என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை அமைந்தகரை பி.வி.ஆர். மால் தியேட்டரில் நடைபெற்ற ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதிகாவுக்கு, இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குநர் சரண், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, நடிகர் நாசர், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, A.L.அழகப்பன், G.தனஞ்செயன், நடிகை ரோகிணி, நடிகர் முனைவர் கு.ஞானசம்பந்தம், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் அருள்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முனைவர் கு.ஞானசம்பந்தம் ‘நடிகவேள் செல்வி’ என்கிற பட்டத்தை நடிகை ராதிகாவுக்கு வழங்கினார்.
பட்டம் வழங்கிய முனைவர் கு.ஞானசம்பந்தம் நடிகை ராதிகா பற்றிப் பேசும்போது, “ராதிகாவுக்கு இந்தப் பட்டத்தை வழங்குவதற்காக இயக்குநர் சரண் பல மாதங்களாக திட்டமிட்டிருந்தார். இப்போதுதான் அது முடிந்திருக்கிறது.
ராதிகா இந்தப் பட்டத்திற்கு முழுவதும் தகுதியானவர். ராதிகா இந்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் மிக, மிக வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவர் படைத்த சாதனைகள் அளப்பரியது. தொலைக்காட்சி, திரைப்படம் என இரண்டிலும் அவரின் பற்பல சாதனைகள் போற்றப்பட வேண்டும். அவரது சாதனைகளை கௌரவிக்கும்விதமாக இன்று அவருக்கு இந்த நடிகவேள் செல்வி என்னும் பட்டம் அளிக்கப்படுகிறது. ராதிகாவின் சாதனைகளோடு, அவரது தந்தையின் நினைவுகளும் பாதுகாத்து போற்றப்பட வேண்டும்…” என்றார்.
நடிகர் சரத்குமார் பேசும்போது, “ராதிகாவை கௌரவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் திரையுலகத்தில் என்னைவிட மூத்தவர். பிரபலமான நட்சத்திரம். கடந்த 41 வருடங்களாக ராதிகா சினிமாவில் இருக்கிறார். இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டியவர். என்னைப் பொறுத்தவரை அவர்தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’. அவருக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்திருக்க வேண்டும். பத்மஶ்ரீ விருதுக்கு முழுத் தகுதியானவர் ராதிகா. இந்தப் படக் குழுவினர் அவரை கௌரவித்தமைக்கு எனது நன்றிகள்…” என்றார்.
நடிகர் நாசர் பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘நடிகவேள் செல்வி’ என்னும் பட்டத்திற்கு ராதிகா முழுத் தகுதியானவர். சரத்குமார் சொன்னதுபோல் அவர் இன்னும் பல உயரங்களுக்கும் தகுதியானவர். ஒரு படத்தில் சிலையாக நடிக்கச் சொன்னாலும் அந்தப் படத்தில் சிலை நன்றாக நடித்திருகிறது என்கிற பெயரைப் பெற்றித் தருவார் ராதிகா. அவருக்கு எனது வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ராதிகாவுக்கு இன்று இந்தப் பட்டம் அளிக்கப்பட்டது மிகுந்த பெருமை வாய்ந்தது. இனிமேல் அவரது பெயரைச் சொல்லும்போது அவரது தந்தை நடிகவேளும் நினைவு கூறப்படுவார்..” என்றார்.
நடிகை ரோகிணி பேசும்போது, “இந்த விழாவில் ராதிகா அவர்களுக்கு பட்டம் அளிக்கப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சி. அவரது தைரியம்.. அவரது ஆற்றல் மூலம் பல பெண்களுக்கு முன் மாதிரியாக திகழ்பவர். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது தந்தையின் சாயலில் மிக வித்தியாசமான ஒன்று. கண்டிப்பாக பெரிதாகப் பேசப்படும்…” என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது இந்த அளவு கொண்டாடுவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அப்பாவின் நினைவு போற்றப்படுவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
பாரதிராஜா ஸார் என் வீட்டுக்கு வந்து என்னை ஹீரோயினா நடிக்க வைக்க அழைத்தபோது எங்கப்பா ரொம்பவும் ஆச்சரியப்பட்டார். ‘ராதிகா ஹீரோயினா?’ என்றார். ஏனென்றால் அப்போது எனக்கு சினிமா பற்றிய சிந்தனையே இல்லை. எப்போது வீட்டில் இருந்தாலும் ஏதாவது புத்தகம் படிச்சிக்கிட்டே இருப்பேன். என்னை போய் நடிக்கக் கூப்பிட்டதால் அப்பாவுக்கு அப்படியொரு ஆச்சரியம்.
ஆனாலும், நான் நடிக்க ஒப்பந்தமாகி முதன்முதலாக ஷூட்டிங்குக்கு கிளம்பும்போது அப்பா எங்கயோ வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது எனக்கு மேக்கப் போடும்போது அவரே முதன்முதலாக மேக்கப்பை என் முகத்தைல போட்டுவிட்டு ‘என் நடிப்பு உன்னுடன் இருக்கட்டும்’ என்று சொல்லி வாழ்த்தினார்.
அப்போது எனக்கு அது ஒரு பெரிய விஷயமா இல்லை. ஆனால் இன்னிக்கு அதை நினைத்துப் பார்த்தால் ரொம்பப் பெருமையா இருக்கு. நான் இத்தனை வருஷமா நடிச்சதும், இன்னமும் நடிச்சுக்கிட்டிருக்கிறதும் அவருடைய ஆசீர்வாதத்தாலதான்றது எனக்குப் புரிஞ்சது.
என்னுடைய அப்பா, என்னுடைய அம்மா இந்த இரண்டு பேருடைய ஆசீர்வாதங்களும்தான் என்னை இந்த அளவுக்கு உயரத்துக்குக் கொண்டு வந்து வைச்சிருக்கு. அதற்காக அவர்களுக்கு எனது நன்றிகள்.
இந்தப் படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்தப் படத்தில் என் கேரக்டர் என் அப்பாவின் சாயல் கொண்டது. அதுதான் இந்தப் பட்டம் எல்லாம் கொடுப்பதை சரணுக்கு ஞாபகப்படுத்தியியிருக்கும் என நினைக்கிறேன். எதுவானாலும் எனக்கு இப்பட்டத்தை அளித்ததற்கு மிக்க நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.













