full screen background image

“வதந்திகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம்” – ‘பருத்தி வீரன்’ சுஜாதாவின் வேண்டுகோள்

“வதந்திகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம்” – ‘பருத்தி வீரன்’ சுஜாதாவின் வேண்டுகோள்

தமிழ்ச் சினிமாவில் பல்வேறு வெற்றி பெற்ற படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்தி வீரன்’ சுஜாதா.

2004-ல் வெளிவந்த கமலின் ‘விருமாண்டி’ படத்தில்தான் இவர் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்பு 2007-ல் வெளிவந்த ‘பருத்தி வீரன்’ இவருக்கு பரவலான ஒரு வெளிச்சத்தைத் தேடித் தந்தது. ஃபிலிம்பேர் உட்பட பல விருதுகளைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என அனைத்து பெரிய கதாநாயகர்களின் படங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையாகி விட்டார்.

மதுரை மண்ணின் மணம் வீசும் மொழி பேசி தனக்கென ஓர் அடையாளத்தை தேடிக் கொண்டுவிட்டார். அவர் தனக்கான எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை என்ற போதிலும் அவரைப் பற்றி சில செய்திகள் வதந்திகளாக வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபகாலமாக, “இப்போதெல்லாம் சுஜாதா குடும்பத்தைக் கவனிப்பதாகவும் அதனால் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் என்றும் அவர் கையில் படங்களும் இல்லை” என்றும் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து நடிகை சுஜாதா பேசும்போது, “எப்படி இந்தச் செய்தி வந்தது என்று தெரியவில்லை. யாரோ அவிழ்த்துவிட்ட கதை போல் இது தெரிகிறது. எனக்கு யார் மீதும் கசப்பும் இல்லை. எனக்கு யாரும் விரோதிகளும் இல்லை. அப்புறம் எப்படி இப்படி?

அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தில்கூட என் நகைதான் காணாமல் போகும். அந்தப் பழி கதை நாயகன் ராஜாக்கண்ணு மேல் விழும். இந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனையாக மாறும். அந்தப் படம் பற்றி இப்போது நாடே பேசிக்கொண்டிருக்கிறது. இப்படி என் படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்த வாரத்தில்கூட நான் நடித்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘வேலன்’, ‘மதுரை மணிக்குறவர்’ என இரண்டு படங்கள் இந்த மாதமே ரிலீஸ் ஆகவிருக்கிறது. நான் நடித்து வெளி வர வேண்டிய படங்கள் சில உள்ளன. சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் மதுரையில் இருந்து கொண்டுதான் படங்களில் நடித்து வருகிறேன். இதை அறிந்து கொண்டுதான் எனக்கு திரைப்பட வாய்ப்புகளும் வருகின்றன. கொரோனா காலத்தில் உலகமே முடங்கிக் கிடந்தபோதுதான் நான் நடிக்காமல் இருந்தேன்.

குடும்பத்துக்காக நடிப்பை தவிர்க்கிறேன் என்பதெல்லாம் தவறு. எனக்குக் குடும்பம் முக்கியம். அதேபோல நடிப்பும் முக்கியம். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டுதான் 90 படங்களில் நடித்திருக்கிறேன். இதில் குடும்பமா, நடிப்பா என்று புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எல்லா நடிகர்களுக்கும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது. அது போல் தான் எனக்கும். மகள்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். மூத்தமகள் ஸ்ருதிப் பிரியா வேலைக்கு செல்கிறாள். சின்னவள் சுபிக்ஷா படித்துக் கொண்டிருக்கிறாள். எனவே எனது குடும்பப் பொறுப்பு குறைந்திருக்கிறது.

இப்போது எனக்கு எந்தவித குடும்ப அழுத்தங்களும் கிடையாது. அதனால் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பொய்ச் செய்திகளை, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்…” என்று கேட்டுக் கொண்டார்.

Our Score