ஹீரோயின்களை பொறுமையாகத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்துவதுபோல, தற்போது படத்தில் ஒரு பாடலுக்கும் ஆடும் நடிகைகளைக்கூட இப்படித்தான் தேடிப் பிடித்து அழைத்து வருகிறார்கள்.. ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ரகசியாவை அறிமுகப்படுத்தி ஏற்படுத்திய பரபரப்பு அதன் பின்பு கோடம்பாக்கத்தை இப்படித்தான் வாட்டி வதைக்கிறது.. சமீபத்தில் இந்த வதைப்பில் சிக்கியவர் பிரசாந்த்.
இவருடைய பேட்ச் நடிகர்களில் விக்ரம் இப்போதும் டாப் மோஸ்ட் நடிகர் பட்டியலில் இருக்க பிரசாந்துக்கு ஏதோ போதாத காலம்.. இன்னமும் மீண்டும் ஒரு ரவுண்டு வர டர்னிங் பாயிண்ட்டாக ஒரு படம் சிக்கவில்லை. இதற்கு முன்னர் நடித்த ‘பொன்னர் சங்கர்’, ‘மீண்டும் மம்பட்டியான்’ படங்களெல்லாம் பேசப்படாமல் போக.. இப்போது பிரசாந்த் தனது வெற்றியை மனதில் வைத்து ‘சாஹசம்’ என்ற பெயரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே தயாரிக்கிறார். மேலும் தியாகராஜன் இந்தப் படத்தில் நடிக்கவில்லையாம்..!
இந்த ‘சாஹசம்’ படத்தில்தான் நர்கீஸ் பக்ரி என்ற பிரபல பாலிவுட் ஹீரோயினை ஒரேயொரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆட அழைத்து வந்திருக்கிறார்கள். இவர் தற்போது ‘ஸ்பை’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறாராம். இவர் ஏற்கனவே ரன்பீர் கபூருடன் ‘ராக் ஸ்டார்’, ஜான் ஆப்ரஹாமுடன் ‘மெட்ராஸ் கபே’, ஷாகித் கபூருடன் ‘பட்டா போஸ்டர் நிக்லா ஹீரோ’, வருணுடன் ‘மேன் தேரா ஹீரோ’ ஆகிய பிரபலமான சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட உள்ளன. வெகு வேகமாக வளரும் ‘சாஹசம்’ படத்தில் வேலை தேடும் இளைஞராக பிரசாந்த் நடிக்கிறாராம். இவருடன் ஒரு முன்னணி நடிகை கதாநாயகியாக நடிக்க தேர்வு நடைபெற்று வருகிறது. தமன்னாவை கேட்டிருப்பதாக கிசுகிசு தகவல். ஆனாலும் உறுதியானத் தகவல் தமன்னா தரப்பிடம் இருந்து இன்னமும் வரவில்லையாம்..
இந்தப் படத்தின் கதை திரைக்கதையை விக்ரம் எழுத, ரகளபுரம் இயக்குனர் மனோகர் வசனம் எழுதுகிறார். கலை இயக்கத்தை மிலன் செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். அருண் ராஜ்வர்மா எனும் புதிய இயக்குனர் இந்த சாஹசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்குனர் மேஜர் ரவியிடம் உதவி டைரக்டராக பல படங்களுக்கு இருந்தவர்.