‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது ‘சாரல்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக் கூடியவர். அழகு, நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லையே என்ற ஆதங்கம் இவருக்கு.
மேடை கிடைத்ததும் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார். நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ‘சாரல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக், விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என திரைப் பிரபலங்களுக்கு முன்னிலையில் இப்படி தனது நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீப்ரியங்கா.
“நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன்.
இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லைன்னு தெரியலை.. தமிழ்ப் பொண்ணு என்பதாலேயே எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட, மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் பேசுவதுகூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். ‘சாரல்’ உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்…” என்றார்.
நடிகை ஸ்ரீப்ரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த இயக்குநர் விக்ரமன், “பாலிவுட்டில் கலக்கிய வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவியெல்லாம் தமிழ்ப் பெண்கள்தாம்மா. அந்த மாதிரி ப்ரியங்காவும் நாளைக்கே லைம் லைட்டுக்கு வரலாமே..” என்றார்.
இதன் பின்பு பேச வந்த நடிகர் விவேக், பிரியங்காவின் பேச்சைக் குறிப்பிட்டு, “ஏன், நாளைக்கேகூட நம்ம விஜய் சேதுபதியே அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை..” என்று விஜய் சேதுபதியை கோர்த்துவிட்டார்.
சற்றே ஜெர்க்கான நடிகர் விஜய் சேதுபதி தான் பேசும்போது, “இப்போது பேசிய நடிகை ப்ரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பார்க்க, லட்சணமாக, அழகாகத்தான் இருக்கிறார். இருந்தும் பெரிய வாய்ப்புகள் அவருக்கு ஏன் கிடைக்கவில்லைன்னு எனக்கும் தெரியலை. அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் நிச்சயம் அவருக்கு வரும்,” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.
என்னதான் தமிழில் கூவினாலும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் மனம் வைத்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நிலைமைதான் இன்றைக்கு திரையுலகில் இருக்கிறது..!










