நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கொஞ்சம் வளர்ந்த பிறகு ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்திலும் சிறுமியாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாகவே மீனா 45 திரைப்படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் 1990-ல் ‘ஒரு புதிய கதை’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பின்பு தமிழில் ராஜ்கிரணுடன் அவர் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஆனார்.
தமிழ் மட்டுமில்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களிலும் கொடி கட்டிப் பறந்தார். தென்னிந்தியாவின் அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் மீனா ஜோடியாக நடித்திருக்கிறார்.
2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் மீனா. அவரது திருமணத்துக்கு பிறகு தற்போது அதிகமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் ‘திரிஷ்யம்-2’ படம் வந்தது.
இதுவரையிலும் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை 4 முறை பெற்றிருக்கிறார். ஆந்திர மாநில அரசின் விருதினை 2 முறை பெற்றிருக்கிறார். பிலிம்பேர் விருதினை 2 முறை பெற்றிருக்கிறார். சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை 4 முறை பெற்றிருக்கிறார். கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். ஏசியாநெட் விருதினையும் பெற்றிருக்கிறார்.
நடிகை மீனா சினிமாவுக்கு வந்து தற்போது 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் நடித்த முக்கிய படங்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை அவரே நேற்றைக்கு வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் இந்த 40 வருட கால பயணம் பற்றி நடிகை மீனா பேசும்போது, “1981-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 40 வருடங்களாக நான் சினிமாவில் இருப்பது எனக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக கதாநாயகர்கள், சக கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. எனது குடும்பத்தினர் என்னை இத்தனையாண்டு காலமும் உற்சாகப்படுத்தி வந்திருக்கிறார்கள். அனைவரின் ஆதரவும் இல்லாமல் என்னால் இத்தனையாண்டு காலம் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது. எனது சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று கூறியுள்ளார்.