தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன்…!

தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன்…!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் தொழில் நுட்பக் குழுவிலும், நடிகர்கள் குழுவிலும் இணைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக,  நடிக்க இணைந்திருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ‘பேட்ட’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியிருந்தார். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்திலும் அவர்தான் நாயகியாக நடித்திருக்கிறார்.

இது குறித்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “தற்போது அழகிலும், நடிப்பிலும் தமிழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனனை, எங்களின் அடுத்த தயாரிப்பான தனுஷ்-43 படத்திற்காக வரவேற்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

தற்போதைய திரையுலகத்தில் வெகு சில நடிகைகளே குடும்ப பாங்கிலான நம் வீட்டு பெண் மற்றும் மாடர்ன் தோற்றம் என  இரண்டிலும் அசத்தலாக இருப்பார்கள். அந்த வகையில்  மாளவிகா மோகனன் இரண்டு தோற்றங்களிலும் மிக  எளிதில் பொருந்துபவராக இருக்கிறார்.

பல திரைப்படங்களில், அழுத்தமான பாத்திரங்களில் தோன்றி திறமையான நடிப்பை தந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இந்த இளம் வயதில் அவர் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யம்தான். அவரது பாத்திரம் இப்படத்திலும் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்.

இப்படம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஆக்சனும் உணர்வுகளும் இரண்டறக் கலந்த அட்டகாசமான கமர்ஷியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்தினை கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

ஜீ.வி.பிரகாஷ் தன் இசையால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து, பெரும் சாதனைகள் செய்து வரும் நிலையில் அவரது இசை இப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். மிகத் திறமை வாய்ந்த தொழில் நுட்பக் குழு படத்தில் இணைந்துள்ளது.  இப்படக் குழு மிகச் சரியான படைப்பை தந்து, பெரு வெற்றியை பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

Our Score