தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ அமைப்பின் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 13-ம் தேதியன்று தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ அமைப்புக்கு புதிய தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு, நடிகைகள் ஜீவிதா, ஹேமா, இவர்களுடன் குணச்சித்திர நடிகரான நரசிம்மராவ் ஆகியோர் தனித்தனி அணிகளாக போட்டியிடுவதாக அறிவித்துவிட்டனர்.
இதையடுத்து இவர்கள் தங்களது அணியினருடன் கலந்துரையாடல், திட்ட அறிக்கைகள், அறிவிப்புகள் என்று பலவற்றையும் தொடர்ந்து அறிவித்து வந்தனர்.
நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் பிரகாஷ்ராஜ்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தனர். மோகன் பாபு மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் விஷ்ணு மஞ்சுவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியினர் பிரகாஷ் ராஜை கன்னடர் என்று விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் இது அதிகமாக தெலுங்கில் எடுபடவில்லை.
இன்னொரு பக்கம் மா சங்கத்திற்கு புதிய சொந்த பில்டிங் கட்டுவதுதான் தங்களது தலையாய பணி என்று அனைத்து அணியினரும் ஒரு சேர அறிவித்து பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
பிரகாஷ்ராஜ் மற்றும் விஷ்ணு மஞ்சு அணிகள் பலமாக இருந்தாலும், ஹேமா மற்றும் ஜீவிதா இருவரும் தனித்தனியே நிற்பது வாக்குகளைப் பிரிக்கும் என்பது கண் கூடாகத் தெரிந்தது.

இதையடுத்து ஹேமா மற்றும் ஜீவிதா இருவரிடமும் பிரகாஷ்ராஜ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின் பலனாக ஹேமாவும், ஜீவிதாவும் தகுந்த பதவியை அளித்தால் அணியில் சேரத் தயார் என்றனர்.
அதற்கேற்றபடி வாக்குறுதியை பிரகாஷ்ராஜ் அளித்ததால் அவர்கள் பிரகாஷ்ராஜ் அணியில் நேற்று இணைந்தனர். இதனால் அவரது அணி பலம் பொருந்திய அணியாக உருவெடுத்துள்ளது.
இதனால் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது அணியில் திருத்தம் செய்து மீண்டும் மாற்றியமைத்து அறிவித்துள்ளார். அதன்படி, நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத் தலைவராகவும், ஹேமா மற்றும் பேனர்ஜி இருவரும் துணைத் தலைவர்களாகவும், ஜீவிதா ராஜசேகர் பொதுச் செயலாளராகவும், உத்தேஜ், அனிதா செளத்ரி இருவரும் துணைச் செயலாளர்களாகவும், நாகி நீடு பொருளாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப் போவதாக பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வரும் தேர்தலில் பிரகாஷ் ராஜிற்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையேதான் நேரடி போட்டி நடைபெறவிருக்கிறது.
ஆனால் மறைமுகமாக சிரஞ்சீவிக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே மோதல் நடைபெறப் போவதாக தெலுங்கு திரையுலகத்தினர் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.