தமிழ்ச் சினிமாவில் அம்மா கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கென்றே மிகப் பொருத்தமான முக அழகும், உடலமைப்பும், வசீகரமும் கொண்டவர்கள் மிகக் குறைவுதான்.
தற்போது அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் 1980, 1990-களில் நாயகியாக நடித்தவர்களும் அடங்குவார்கள். இவர்களைத் தவிர்த்த மற்றைய அம்மா நாயகிகளில் மிக முக்கியமானவர் நடிகை எலிஸபெத் சூரஜ்.
கடந்த 19 வருடங்களாக தமிழ்ச் சினிமாவில் ஒரு நடிகையாக தொடர்ந்து நடித்து வரும் எலிஸபெத், சென்னையிலேயே பிறந்து வளர்ந்து தமிழை அட்சரம் பிறழாமல் பேசும் திறன் பெற்றவர்.
இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எலிஸபெத். பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இன்றும் தொடர்ந்து நடித்து வருகிறார். கூடவே விளம்பரப் படங்களிலும் இவரது பங்களிப்பு பெரிதாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொந்த பந்தம்’, ‘பிரியமானவள்’, ‘சித்தி-2’ மற்றும் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘மலர்’ ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புதுக்கவிதை’, ‘தேன்மொழி பி.ஏ’, ‘கண்ணே கலைமானே’ ஆகிய தொடர்களிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கனா’ ஆகிய மக்கள் மனதில் இடம் பிடித்தத் தொடர்களில் நடித்து தொலைக்காட்சி ரசிகைகளுக்கும் நன்கு அறிமுகமானவர்.
திரைப்படங்களைப் பொறுத்தமட்டில் இன்றைய இளம் நாயகர்கள் பலருக்கும் அம்மாவாக வெள்ளித்திரையில் பவனி வந்திருக்கிறார் இந்த எலிஸபெத். ‘வாகை சூட வா’, ‘ராட்சஸன்’, ‘வாட்ச்மேன்’, ‘கடம்பன்’, ‘அமரகாவியம்’, ‘நில் கவனி செல்லாதே’, ‘சிங்கப்பார்வை’, ‘ஒரு நாள் கூத்து’, ‘வை ராஜா வை’, ‘ராட்டினம்’ போன்ற படங்களில் ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார் எலிஸபெத்.
இவர் மாற்றுத் திறனாளியாக கண் பார்வை இல்லாத அம்மாவாக நடித்திருக்கும் ‘வென்று வருவான்’ திரைப்படம் இவரது நடிப்புக்காகவே பேசப்பட்டது என்றே சொல்ல்லாம். இத்திரைப்படத்தில் இவர் வாயசைத்து பாடி, நடித்திருக்கும் ‘என் மகனே’ என்ற பாடல் காட்சி இன்றைக்கும் யூடியூபில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
தற்போது எலிஸபெத்தின் நடிப்பில் ‘சார்’ என்ற படமும், ‘ஆர்யமாலா’ என்ற படமும் வரும் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வரவுள்ளன.
1980-களில் நடக்கும் கதையாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதிலும் ஒரு அழகான காதல் கதையுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எலிஸபெத், ஹீரோயினுக்கு அம்மாவாக சிறப்பாக நடித்துள்ளார்.
ஆர்யமாலா படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து நடிகை எலிஸபெத் பேசும்போது, ‘காத்தவராயன்’ என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், படம் நெடுகிலும் வரும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில், நாயகியின் அம்மாவாக நடித்துள்ளேன்.
என்னுடைய கதாப்பாத்திரம் அம்மாக்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. படம் தெருக்கூத்துக் கலையை பேசுவதாக இருந்தாலும், பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சினைகள்.. இளம் வயதில் அதை அவர்கள் எதிர்கொள்ளும்விதம், தாய்மார்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கும்வகையில் எனது கதாப்பாத்திரத்திற்கு படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன.
நிஜ வாழ்க்கையில் ஒரு இளம் பெண்ணுக்குத் தாய் என்ற வகையில் இந்தக் கேரக்டரை நான் மிகவும் விரும்பி செய்துள்ளேன். எனது கதாப்பாத்திரத்தை படம் பார்க்கும் பெண்கள் நிச்சயமாக விரும்புவார்கள் என்று நம்புகிறேன்..” என்கிறார் பெரும் மகிழ்ச்சியோடு..!
வரும் அக்டோபர் 18-ம் தேதி இந்த ‘ஆர்யமாலா’ திரைப்படம் வெளியாகவிருக்கும் சூழலில் அதே 18-ம் தேதி இவர் நடித்திருக்கும் ‘சார்’ படமும் வெளியாவதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் எலிஸபெத்.