‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ‘ராஜபார்வை’ படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘ஆட்ட கலசம்’ படத்தின் மூலம் நாயகியானார். அதற்கு பிறகு ரஜினியின் ‘ஊர்க்காவலன்’, ‘சேரன் பாண்டியன்’, ‘மதுமதி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 300 படங்களில் நடித்திருக்கிறார்.
இதிலெல்லாம் இவருக்குக் கிடைக்காத விளம்பரம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்தபோது இவருக்குக் கிடைத்தது. இதன் பின்னர் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார்.
‘பொண்டாட்டி ராஜ்யம்’ படத்தில் ‘பாரதி ஒரு நிமிஷம் உள்ள வாயேன்’ என்று தன் தங்கை ரஞ்சிதாவிடம் இவர் பேசும் வசனம் பிரபலமானது. இதேபோல் ‘சின்னவர்’ படத்தில் சந்திரசேகருக்கு ஜோடியாக நடித்த இவரது கேரக்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்தது.
2000-ம் ஆண்டுகளில் நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு திருமணமாகி செட்டிலானார். குழந்தை பிறந்த பின்பு திரும்பவும் நடிக்க வராமல் ஓய்வில் இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல் இப்போது 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சித்ரா.
இது பற்றிப் பேசிய நடிகை சித்ரா, “எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது என் மகள் 10-வது படித்துக் கொண்டிருக்கிறாள். அதனால் இனிமேல் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்…” என்கிறார் சித்ரா.