இந்தக் கொரோனா ஊரடங்கினால் அடி மட்ட மக்களில் இருந்து உயர் வர்க்கம்வரையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரையுலக நடிகைகளும் விதிவிலக்கல்ல.
தெலுங்குலகத்தின் பழம் பெரும் நடிகையான பாவலா சியாமளாவும் இந்தக் கொரோனவால் வறுமையில் வாடி வருகிறாராம்.
இவர் 1984-ல் ‘சேலஞ்ச்’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி ‘ஸ்வர்ணகமலம்’, ‘பாபாய் ஓட்டல்’, ‘கோதண்ட ராமுடு’, ‘இந்த்ரா’, ‘கட்கம் கவுரி’, ‘பிளேடு பாப்சி’, ‘ரெயின்பொப்’, ‘குண்டூர் டாக்கீஸ்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் 2019-ல் ‘மதுவடலரா’ படம் வந்தது.
அதன் பிறகு கொரோனாவால் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லையாம். இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர் தனக்குக் கிடைத்த பரிசு கேடயங்களை வந்து விலைக்கு விற்றுத்தான் சாப்பிடுகிறாராம்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு காச நோய் உள்ளது. எனது மகளும் உடல் நலம் குன்றி இருக்கிறார். மருத்துவ செலவுகளுக்கு மாதம் 10 ஆயிரம் தேவையாய் இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் யாரும் எனக்கு உதவவில்லை. எனவே எனக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் விற்றுவிட்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார் சியாமளா.
இவரது கஷ்ட நிலையை அறிந்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.1 லட்சம் உதவி வழங்கியிருக்கிறார். மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நடிகை சியாமளாவுக்கு 1 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாயை வழங்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் சியாமளாவை இணைத்துக் கொள்ள சிபாரிசு செய்துள்ளார். இதனால் சியாமளாவுக்கு இனிமேல் தொடர்ந்து மாதந்தோறும் 6000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.
இன்னும் இந்தக் கொரோனா மக்களை என்ன பாடுபடுத்தப் போகிறதோ.. தெரியவில்லை..!