இந்திய நிறுவனங்கள் நடத்தும் OTT தளங்களில் 90 சதவிகிதம் ஆபாசப் படங்களைத்தான் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.
தற்போதைய ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் பெருகி வருகின்றன. சென்சார் சான்றிதழும், அரசின் அனுமதியும் ஓடிடி தளங்களுக்குத் தேவையில்லை என்பதால் சமீப மாதங்களில் மிக அதிகமாக ஆபாசப் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற படங்களைத் தயாரித்ததாக மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகையான கெஹானா வசிஸ்தாவை மும்பை குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இவருடன் சேர்த்து மேலும் 4 பேர் கைதாகியுள்ளனர்.
மும்பை அருகேயிருக்கும் மலாட்டின் மட் தீவில் உள்ள சில பங்களாக்களில் இது போன்ற ஆபாசப் படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்ததையடுத்து இன்று காலை மும்பையின் குற்றப் பிரிவு போலீஸார் இந்த பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போதுதான் இந்த ஆபாசப் பட ஷூட்டிங் நடைபெற்றதை போலீஸார் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட நடிகை கெஹானா வசிஸ்தா ‘ஹோதித் மூவிஸ்’ என்ற பெயரில் ஆபாச திரைப்படங்களை தயாரித்து இணையத் தளங்களில் பதிவேற்றி வருகிறாராம். சில படங்களில் அவரே நடித்திருக்கிறார். இதுவரையிலும் மொத்தமாக 87 படங்களை அவர் அப்லோடு செய்துள்ளார்.
இந்த ஆபாச படங்களை பார்க்க மாதத்திற்கு 199 ரூபாய், 3 மாதங்களுக்கு 499 ரூபாய், ஆண்டுக்கு 999 ரூபாய், மிகவும் ஆபாச படங்களை பார்க்க ஒரு மாதத்திற்கு 2,000 ரூபாய் என்ற அடிப்படையில் வசூலித்திருக்கிறார்கள்.
இதையடுத்து அங்கே ஆபாசப் படம் எடுத்துக் கொண்டிருந்த ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்தனர். ஆபாச படங்களை வீடியோ எடுத்த கேமிராமேன் மோனு ஜோஷி, கிராபிக்ஸ் டிசைனரும், நடிகையுமான ரோயாகான் என்ற யாஸ்மின், நடிகை கெஹானா வசிஸ்தா, துணை நடிகர்கள் பானு தாக்கூர், முகமது நசீர் ஆகியோர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மும்பை குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரி மிலிந்த் பரம்பே கூறுகையில், “இந்த ஆபாச பட ஷூட்டிங் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட சில ஸ்கிரிப்டுகள், ஆறு மொபைல் போன்கள், ஒரு லேப்டாப், லைட் ஸ்டாண்ட், கேனான் நிறுவனத்தின் கேமரா உள்ளிட்ட மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வங்கிக் கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
மட் தீவில் ஏராளமான பங்களாக்கள் உள்ளன. அவை பெரும்பாலும் வாடகைக்கு விடப்படுகின்றன. 30 நிமிட ஆபாச படத்தை படமாக்க அதில் நடிக்கும் நடிகர், நடிகைககளுக்கு 30,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது…” என்றார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகையான கெஹானா வசிஸ்தா ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். பல தெலுங்கு படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். ஹிந்தியில் சில பட்ஜெட் படங்களிலும் நடித்திருக்கிறார்.