full screen background image

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் களம் கண்ட திரையுலக பிரபலங்கள்

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் களம் கண்ட திரையுலக பிரபலங்கள்

2016 தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெற்றுள்ள தேர்தலில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்களும் போட்டியிட்டனர்.

வேளச்சேரி தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் நடிகர் வாகை சந்திரசேகர் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சி.முனுசாமியைவிடவும் 8838 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதே வேளச்சேரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட நடிகர் கிட்டி, 2477 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.

பல்லாவரம் தொகுதியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வின் ஐ.கருணாநிதியிடம் 14656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.முக. கூட்டணியில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனைவிடவும் 12001 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார்.

karunas

திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.வின் திவாகரனைவிடவும் 8696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 12497 வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான விஜயகாந்த் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார். விஜயகாந்த் இத்தொகுதியில் 34447 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.

இப்போது சட்டப் பேரவைக்குத் தேர்வாகியுள்ள கருணாஸ் போட்டியிட்ட முதல் தேர்தல் இதுதான். முதல் தேர்தலிலேயே இவர் வெற்றி பெற்றது அதிர்ஷ்டம்தான். அதோடு இவர் நடத்தி வரும் முக்குலத்தோர் சார்ந்த இயக்கத்தின் சார்பில்தான் இந்தத் தொகுதி இவருக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சட்டப் பேரவைக்கு செல்லும் இன்னொரு நடிகரான வாகை சந்திரசேகர் ஏற்கெனவே ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இப்போதுதான் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றி பெற்றவர்களுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

Our Score