மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை இன்று (11.1.2016) தலைமை செயலகத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் திரு.விஷால், துணை தலைவர்கள் திரு. பொன்வண்ணன் மற்றும் திரு. கருணாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்பு பத்திரிகையாளர்களிடம் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் பேசினார்கள்.
“தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களை இப்போது சந்தித்தோம். நடிகர்கள் அனைவரும் சேர்ந்து வெள்ள நிவாரண நிதிக்காக 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினோம். குறுகிய காலகட்டத்திலேயே இந்த இரண்டாவது சந்திப்பு நடந்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
முதல்வர் அவர்களை நாங்கள் சந்தித்து பேசும்போது ஒரு கோரிக்கை வைத்தோம்.
பொதுவாக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் அது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி.. இந்தக் காலகட்டத்தில் வெளியூரில் இருக்கும் நாடக நடிகர்கள் தங்கள் ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று நாடகத்தில் நடிப்பது, மற்றும் நாடகம் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட 3 மாத காலகட்டம் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பொதுவாகவே நாடகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் வரவேற்பு இருக்கும். ஆறு மாத காலகட்டம் அவர்களுக்கு வேலை இருக்கும். அதன் பின்பு தொடர்ச்சியாக அடுத்த ஆறு மாத காலகட்டத்துக்கு வேலை இருக்காது.
அந்த ஆறு மாதம் முடிவடைந்து வேலை வரும் இந்த நேரத்தில் அவர்களுக்கு தேர்தலினால் தடை வந்தால், தொடர்ச்சியாக ஒரு வருட காலம் அவர்களுக்கு வேலை இல்லாமல் போகும் சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.
நாங்கள் இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கை யாதெனில், ‘இந்த மாதிரியான தேர்தல் காலகட்டத்திலும் நாடக நடிகர்கள் நாடகம் போடுவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்’ என்று கோரினோம்.
அதற்கு முதல்வர் அம்மா எங்களிடம், ‘தமிழக அரசு எப்போதுமே அப்படி ஒரு விஷயத்தை செய்தது இல்லை. தமிழக அரசு என்றுமே நாடக நடிகர்களுக்கு உதவியாகத்தான் இருந்துள்ளது. அதுபோல் இருந்தால் தமிழக அரசு தலையிட்டு கண்டிப்பாக நாடக நடிகர்களுக்கு உதவி செய்யும். அதே போல் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு அது நடைபெறுகிறது என்றால் அந்த காலகட்டத்தில் நீங்கள் இதை தேர்தல் ஆணையத்திடம் ஒரு கோரிக்கையாக வைத்தால் சரியாக இருக்கும்..’ என்றார்கள்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பூஜையின் துவக்க விழாவிற்கு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் வர வேண்டும் என்று நாங்கள் சென்ற முறை சந்தித்தபோதே கோரிக்கை வைத்திருந்தோம், அதே கோரிக்கையை இந்த முறையும் தலைவரும், பொது செயலாளரும் வைத்தனர். முதலமைச்சர் அம்மாவும் ‘நிச்சயமாக ஒரு தேதியில் வந்து கலந்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது..” என்றனர்.