தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து மூத்த நடிகர்களும், முன்னாள் நிர்வாகிகளுமான நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவருமே தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இன்று மாலையில் நடைபெற்ற சங்கத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் இது பற்றி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
“ஏற்கெனவே சங்கத்தின் பழைய நிர்வாகிகள், சங்கத்தின் கடந்த கால கணக்கு வழக்குகளை இதுவரையிலும் ஒப்படைக்கவில்லை” என்று சங்கத்தின் புதிய தலைவரான நாசர் புகார் கூறியிருந்தார். இதே புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடத்தில் புகாரும் அளித்திருந்தார்.
இந்தப் புகாரில் கொஞ்சம் உண்மையிருப்பதை ஒத்துக் கொண்ட முன்னாள் தலைவர் நடிகர் சரத்குமார், மிக விரைவில் தான் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க இருப்பதாகச் சொல்லியிருந்தார்.
கடைசியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக சங்கத்தில் பொருளாளராக இருந்த நடிகர் வாகை சந்திரசேகர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், அந்தப் பொறுப்பையும் நடிகர் சரத்குமாரே கூடுதலாக கவனித்து வந்தாராம். அதனால் கணக்கு வழக்குகளை அவரிடத்தில்தான் கேட்க வேண்டும் என்று நடிகர் வாகை சந்திரசேகர், சரத் பக்கம் கை காட்டியிருக்கிறார். இதனால் இதற்கான முழு பொறுப்பாளியாகவும் சரத்குமாரே ஆக்கப்பட்டுவிட்டதால் அவரே பதில் சொல்லவும் கடமைப்பட்டவராகவும் ஆனார்.
இடையில் சங்க நிர்வாகம் பற்றி சரத்குமாரும், ராதிகாவும், சிம்புவின் ‘பீப்’ பாடல் பிரச்சினையின்போது ஏதோ கமெண்ட் அடிக்க.. அவர்கள் இருவருக்கும் ஷோ கேஸ் நோட்டீஸ்கள் பறந்தன. அதற்கான முறையான பதில்கள் இப்போதுவரையிலும் வரவில்லை என்று தலைவர் நாசர் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில்தான் இன்றைக்கு திடீரென்று அவர்கள் மூவருமே தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழல் காரணமா அல்லது கணக்கு வழக்குகளை ஒப்படைக்காததுதான் காரணமா என்று உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் சங்கத்திலிருந்து இதற்கான காரணங்களோடு விளக்கக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். அப்போது என்ன காரணத்திற்காக அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பது தெரிய வரும்.
காவிரி பிரச்சினை குறித்தும், கருணாஸ் பதவி விலகல் வதந்தி குறித்தும் இன்றைக்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன சங்கத்தின் நிர்வாகிகள், இந்த முன்னாள் நிர்வாகிகளின் நீக்கம் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எஸ்கேப்பானது ஏன் என்று தெரியவில்லை.
எப்படியிருந்தாலும், மிக விரைவில் எதிரணியினர் கூட்டம் போட்டு விளக்கம் சொல்லும்போது முழுமையாகத் தெரிந்துவிடும்..!









