full screen background image

திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்டத்திற்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா எதிர்ப்பு..!

திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்டத்திற்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா எதிர்ப்பு..!

இந்திய ஒன்றிய அரசால் விரைவில் கொண்டு வரவிருக்கும் திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்தை எதிர்த்து, நடிகர் சூர்யாவும் இப்போது குரல் கொடுத்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் திரைத்துறையினருக்கான ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் போகிறது.

இதற்கான திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்ட முன் வடிவை அறிவித்திருக்கிறது. இந்த முன் வடிவை வெளிப்படையாக தெரிவித்ததுடன் பொதுமக்களும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தப் புதிய சட்டத்தில் என்ன இருக்கிறது..?

இந்தச் சட்டம்தான், இந்தியாவில் திரைத் துறையை நெறிப்படுத்தும் சட்டமாக இருக்கிறது. இதில், நான்கு திருத்தங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தங்களுக்கு அடிப்படை, சினிமா துறையில் நடைபெறும் பல்வேறுவிதமான திருட்டுகளை கட்டுப்படுத்துவதுதான் என்று தெரிவிக்கிறது இந்த மசோதா.

தற்போது திரைப்படங்களுக்கு சென்சார் போர்டில் யு’, ‘யு/ஏ’ மற்றும் ‘ஏ’ என்று மூன்று வகையாக சான்றிழ்கள் தரப்படுகின்றன. இதில், யு’ திரைபடங்களை அனைவரும் பார்க்கலாம். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். ‘ஏ’ திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.

இதில், தற்போதைய புதிய சட்டத்தின்படி ‘யு/ஏ’ சான்றிதழை, வயது வாரியாக பிரிப்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யு/ஏ 7+’, ‘யு/ஏ 13+’ மற்றும் ‘யு/ஏ 16+’ என்று பிரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஓ.டி.டி., தளங்களில் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் அதிகமான பின், இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதைக் கருத்தில் கொண்டே, யு/ஏ’ சான்றிதழ் மேலும் பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திருத்தம், நேரடியாக சினிமா திருட்டு சம்பந்தப்பட்டது. இதற்காக, 6-ஏ-ஏ’ என்ற தனிப் பிரிவு இணைக்கப்பட உள்ளது.

அதன்படி, ஒரு திரைப்படத்தில் இருந்து எந்த வகையிலும், எந்த இடத்தில் இருந்தும், படத்தின் இயக்குநரது எழுத்துபூர்வமான அனுமதியின்றி, ஒரு சில பகுதிகளையோ, அல்லது முழு படத்தையோ ஒலி – ஒளிப்பதிவு செய்யக் கூடாது. அப்படி செய்தால், அவர்களுக்கு மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள்வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்தத் தயாரிப்பு செலவில் 5 சதவீதம்வரை அபராதம் உண்டு.

மூன்றாவது திருத்தம், தணிக்கை சான்றிதழின் காலம் தொடர்பானது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ், 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதை காலம் முழுதும் செல்லுபடியாகும் சான்றிதழாக வழங்குவதற்கான திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான நான்காவது திருத்தம்தான், தற்போது கலைஞர்கள், படைப்பாளிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.  

தற்போது ஒரு திரைப்படத்துக்கு, தணிக்கை குழு சான்றளித்து, திரையரங்குகளுக்கு வந்த பின், அதை மத்திய அரசு நினைத்தால்கூட நிறுத்த முடியாது. அதற்கான அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை என்று, ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டத்தில் இது தொடர்பாக ஒரு புதிய திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும்விதமாகவோ, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும்விதமாகவோ, அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பாதிக்கும்விதமாக. பொது அமைதி, கண்ணியம், அறநெறியை குலைக்கும்விதமாகவோ; நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும்விதமாகவோ ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம் இருப்பதாக புகார் வருமானால், அத்திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாகி இருந்தாலும், அந்த சினிமாவை மறு முறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழு தலைவருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலாம்…” என்பதுதான் இந்தச் சட்டத் திருத்தம்.

இந்த திருத்தத்தின் படி, மத்திய அரசு, சென்சார் போர்டையும் தாண்டி சூப்பர் சென்சார் போர்டாக மாற முயற்சி செய்கிறது என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து சில நாட்களுக்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

“திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்தை எதிர்த்து, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். கூடவே, கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும், மூன்று குரங்கு சின்னங்களாக, ஒருபோதும் சினிமா, மீடியா மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால், அது மிகப் பெரிய பாதிப்பையே உண்டாக்கும்…” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக தற்போது நடிகர் சூர்யாவும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் இது தொடர்பாக இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல் வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்றைக்குத்தான் கடைசி நாள். உடனே நமது எதிர்ப்பினைத் தெரிவியுங்கள்..” என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா.

Our Score