“தான் இயக்கிய படங்களிலேயே கேவலமான படமென்றால் அது ‘பெரும் புள்ளி’ படம்தான்…” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.
1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பெரும் புள்ளி’. இந்தப் படத்தில் ‘என் உயிர்த் தோழன்’ பாபுவும், சுமா ரங்கநாத்தும் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.பி.செளத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
‘புது வசந்தம்’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் விக்ரமன் இயக்கிய அடுத்தப் படம் இதுதான். ‘புது வசந்தம்’ படத்திற்கு அடுத்தப் படமாக இது வருவதால் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் என்று அனைவரிடமும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காத்திருந்தது.

ஆனால் படத்தைப் பார்த்தவுடன் அத்தனை பேருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம். இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதுடன் விக்ரமனுக்கும் மிகப் பெரிய கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. ‘புது வசந்தம்’ கொடுத்த விக்ரமனின் படமா இது என்று அனைவரும் திட்டித் தீர்த்தார்கள்.
இந்தப் படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய இயக்குநர் விக்ரமன், “அந்தப் ‘பெரும் புள்ளி’ படம் என் திரையுலக வாழ்க்கையில் ஒரு கரும் புள்ளி. அந்தப் படத்தை நான் செய்திருக்கவே கூடாது. என் படங்களிலேயே மிகவும் கேவலமான படம் அதுதான். அந்தப் படத்தை ஏன் செய்தேன் என்பது இப்போதுவரையிலும் எனக்கே தெரியவில்லை..” என்று மன வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.