மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன், கார்த்திக் சுப்பராஜ், பிஜோய் நம்பியார், அரவிந்த்சாமி ஆகிய நான்கு பேர் இயக்கியுள்ளனர்.

இதில் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் ஒரு கதையில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தக் கதை மலையாள சினிமாவின் மூத்த நடிகரான இன்னசென்ட்டின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதையாம்.

இந்தக் கதைக்கு ‘சம்மர் ஆஃப் 92’ என்று பெயர் வைத்துள்ளனர். புகழ் பெற்ற எழுத்தாளரான ஆர்.கே.நாராயணனின் ‘மால்குடி டேய்ஸ்’ பாதிப்பில் இந்தக் கதை உருவாகியுள்ளது என்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளா, தமிழகம், கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

படம் பற்றி இயக்குநர் பிரியதர்ஷன் சொல்கையில், “இந்தக் கதை இடம் பெறும் 35 நிமிடங்களுக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கலாம். அந்த அளவுக்கு நகைச்சுவையுடன் இதனை உருவாக்கியிருக்கிறோம். ஏழே நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா-தமிழ்நாடு எல்லையில் நடைபெற்றபோது எனக்குக் காய்ச்சல் அதிகமாகி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டேன். அந்தப் பகுதியில் இருந்த விஷ செடிகளால் என் உடலில் விஷம் பரவி கடைசியில் அறுவை சிகிச்சை செய்துதான் விஷத்தை வெளியில் எடுத்தார்கள் மருத்துவர்கள். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளும் முடிவடைந்துவிட்டது..” என்றார்.

இந்தப் படம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்படுகிறது. இந்த அந்தாலஜி படத்தின் மூலம் கிடைக்கின்ற வருவாய், அந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

Our Score