full screen background image

“சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே அமைப்பது நடிகர் சங்கத்திற்கு பெரும் அவமானம்…” – நடிகர் விஷால் கொதிப்பு..!

“சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே அமைப்பது நடிகர் சங்கத்திற்கு பெரும் அவமானம்…” – நடிகர் விஷால் கொதிப்பு..!

“நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நடிகர் சங்கம் மணி மண்டபம் அமைக்காத காரணத்தினால் அரசே அந்தப் பணியைச் செய்யும்..” என்று இன்றைக்கு சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அறிவித்தார்.

உடனேயே விஷால் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

IMG_0457

நடிகர்கள் நாசர், பொன்வண்ணன், கார்த்தி, விஷால், ஜே.கே.ரித்தீஷ், மனோபாலா, குட்டிபத்மினி, வேல்முருகன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தனர்.

எடுத்த எடுப்பிலேயே நடிகர் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ. நிகில் முருகன் மேடையேறி நடிகர் நாசரிடம் தனது செல்போனில் இருந்த்தைக் காட்ட அதைப் படித்துவிட்டு பேசத் துவங்கினார் நாசர்.

நாசர் பேசும்போது, “நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது பற்றிய அரசின் அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்து செய்தியொன்றை அனுப்பியுள்ளார்…”  என்று சொல்லிவிட்டு கமலின் செய்தியை மேடையில் வாசித்துக் காட்டினார்.

“நடிகர் திலகத்தை மரியாதையுடன் நினைவு கோரியதில் அரசு, நடிகர் இனத்திற்கும் தனக்கும் பெருமை சேர்த்துக்கொண்டது. கண்ணும் மனதும் நிறைய, நன்றி. அன்னாரது வாரிசு எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முற்படும் பல்லாயிரம் பேரில் ஒருவன்.

அன்பன்
கமல்ஹாசன்” – என்கிற கமல்ஹாசனின் செய்தியை வெளியிட்டார் நாசர்.

தொடர்ந்து மைக்கா வாங்கிய விஷால், “நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எங்களுக்கெல்லாம் முன்னோடி. அவரது பெயரில் அமைக்கப்படவிருக்கும் மணிமண்டபத்தை அரசு செலவில் அமைத்துத் தர முன் வந்திருக்கும் முதலமைச்சருக்கு எங்களது சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..” என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஷால் அணியினர் பதிலளித்தனர். அவர்கள் அளித்த பதில்களின் தொகுப்பு..!

“மணிமண்டபத்தை ஒட்டி புதிய சாலை அமைக்க அரசு நிர்ணயித்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைக்கூட கட்ட முடியவில்லை என்று சொன்னது நடிகர் சங்கத்திற்கு மிகப் பெரிய அவமானம். எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்களே அதனைக் கட்டியிருப்போம்.”

“கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் கட்ட எந்தவொரு முயற்சியையும் நடிகர் சங்கம் செய்யாத்தால்தான் அரசே இதனை செய்ய முன் வந்திருக்கிறது. இதைவிட மிகப் பெரிய அவமானம் நடிகர் சங்கத்திற்கு வேறேதவும் இருக்க முடியாது.”

“நடிகர் சங்க நிர்வாகிகளின் நிர்வாகத் திறமையின்மைதான் நடிகர் திலகத்தின் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறாததற்கு காரணம்.”

“தற்போதைய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வரும்படித்தான் பெரிய நடிகர்களை நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் கேட்டு வருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் கேட்கவே இல்லை.”

“இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெரிய நடிகர்கள் வாக்களிக்கவே வருவதில்லை. அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்பார்கள். அவர்களை மூளைச் சலவை செய்ய முடியாது. ஆனால் வரவழைக்க வேண்டும். அந்தப் பணியைத்தான் இப்போது நாங்கள் செய்து வருகிறோம்.”

“கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சங்க நடவடிக்கைகள் பற்றி பல முறை கேள்வி கேட்டும் பதில் இல்லாததால், வேறு வழியில்லாமல்தான் நாங்களே களத்தில் குதித்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

“நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைக்கவே இல்லை. ஆனால் நடிகர் சங்கம் செயல்பட வேண்டுமெனில் நாங்கள் போட்டியிடத்தான் வேண்டும்.”

“நாங்கள் வெற்றி பெற்று அதே இடத்தில் நிச்சயம் நடிகர் சங்கத்திற்கென்றே பிரமாண்டமான முறையில் கட்டிடத்தை எழுப்புவோம். அந்த இடம் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்றோர் கொலு வீற்றிருந்த இடம். அதனை மீட்டு செப்பனிடுவதே எங்களது முதல் வேலையாக இருக்கும்.”

“பூச்சி முருகன் உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டதே, அவர்கள் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கிறது.”

“சேலத்தில் சமீபத்தில் நடந்த நாடக நடிகர்கள் சங்கத் தேர்தலில் எங்களது ஆதரவு பெற்ற நடிகர் தோல்வியடைந்தார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. ஆனால் ஒரு விஷயம்.. அந்த நடிகர் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. எங்களது ஆதரவினை கேட்டு வந்தார். நாங்கள் கொடுத்தோம். அந்தச் சங்கத்தில் இருக்கும் 134 தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க உறுப்பினர்களிடையே, இந்த நபர் மட்டும் தனியாக 74 வாக்குகளை பெற்றிருக்கிறார். இதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.”

“நடிகர் சங்கத் தேர்தல் அநேகமாக செப்டம்பர் 27-ம் தேதியன்று நடக்கலாம். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்..” என்றனர்.

Our Score