“நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லை…” – ‘#MeTooMovement’ பற்றி விஷாலின் கருத்து..!

“நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லை…” – ‘#MeTooMovement’ பற்றி விஷாலின் கருத்து..!

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்திருக்கும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

அனைவரும் பேசி முடித்த பிறகு கேள்வி பதில் சீசன் துவங்கியது. எதிர்பார்த்ததுபோலவே சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மீ டூ தொடர்பாகத்தான் கேள்விகள் பறந்தன.

‘சினிமா நிகழ்ச்சிகளில், அதுவும் ஒரு திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் அந்தத் திரைப்படம் பற்றிய சந்தேகங்கள், கேள்விகளைவிட்டுவிட்டு வேறு விஷயங்களை பற்றிப் பேசுவது தகுமா’ என்றெல்லாம் திரையுலகில் பலரும் முனங்கி வரும் வேளையில் பத்திரிகையாளர்கள் தங்களது பணியைச் செய்ய வேறு இடமுமில்லை, வழியுமில்லை.. என்று நினைத்ததால் கேள்விகள் பறந்தன.

இப்போது இணையத்தில் பிரபலமாக இருக்கும் “மீ டூ‘ பற்றி வரலட்சுமிகூட கருத்து தெரிவித்து ஆதரவைச் சொல்லிவிட்டார். இது பற்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் விஷாலிடம்தானே இது தொடர்பான கேள்வியைக் கேட்க முடியும்..?

“இரண்டு பெரிய சங்கங்களின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு Me Too விஷயத்தில் நீங்கள் அமைதியா இருக்கீங்களே.. ஏன்..?” என்கிற முதல் கேள்வி விஷால் நோக்கி பறந்தது..

சொல்லி முடிப்பதற்குள்ளாக பொங்கிவிட்டார் விஷால். “டிவிட்டர் என்ன ஜட்ஜ்மெண்டாங்க..? அது ஒரு டெக்னாலஜி டெவலப்மெண்ட். அவ்வளவுதான்..!

மீ டூ இயக்கத்துக்கு எனது ஆதரவு எப்போதம் உண்டு. இப்படி அவர்கள் துணிந்து பேசியது நல்லதுதான். என்னைப் பொறுத்தவரையிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக அது பற்றி புகாரளிக்க வேண்டும். சினிமா உலகில் நடிகைகள் யாரேனும் அந்த மாதிரியான சூழலை சந்தித்தால் அது பற்றி அப்போதே வெளிப்படையாகச் சொன்னால்தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியும். சம்பவம் நடந்து பல வருஷம் கழித்து சொன்னால் அதில் என்ன கருத்து சொல்ல முடியும்.. அது நடந்ததா.. இல்லையா.. உண்மையா.. பொய்யா என்று எப்படி தெரியும்.. யார் சார்பாக பேச முடியும்..?” என்றார்.

“சின்மயி பல வருடங்கள் கழித்து வைரமுத்து மீது குற்றம் சாட்டுவதற்கு காரணமே.. அவர் பாதிக்கப்பட்ட காலத்தில் அவருக்கு நெருக்கமான கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். அதனால் அவர் பயந்துபோய் சொல்லவில்லை என்கிறாரே..?” என்று கேட்டதற்கு, “அதெப்படிங்க.. அதுக்காக இவ்ளோ லேட்டாக சொன்னால்  நாங்கள் என்ன எப்படி இதில் கருத்து சொல்வது..? நடிகை அமலாபாலுக்கு பாலியல் ரீதியாக ஒருவன் தொல்லை கொடுத்தபோது அவங்க உடனடியாக எனக்கு ‘கால்’ பண்ணி சொன்னாங்க. இப்படியொருத்தன் தன்னிடம் நடந்து கொண்டதாக..! உடனே நானும் ‘அவனைப் புடிச்சு வைங்க.. வந்தர்றோம்’ என்றோம். அவங்களும் ‘அந்தாளை புடிச்சுத்தான் வைச்சிருக்கோம்..’ என்றார்.

நானும், கார்த்தியும் உடனேயே அங்க போய் அவங்களை கூட்டிட்டு போஸீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்து அந்தாள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தோம். இதேபோல் அன்றைக்கே சொல்லியிருந்தால் ஏதாவது நடிவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அதனால்தான் சொல்றோம்.. அந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்.

பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பெண்கள் பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும். இப்போதுகூட இந்தப் பட யூனிட்டில் கீர்த்தி, வரலட்சுமி உள்பட எல்லா நடிகைகளும் பாதுகாப்பாகத்தான் இருந்தார்கள்…” என்றார்.

“நடிகர் சங்கம் இது குறித்து ஒரு அறிக்கைகூட விடலியே..?” என்று கேட்டதற்கு, “என்னன்னு சொல்றது.. எதை வைச்சு அறிக்கை விடுவது.. நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் இல்லிங்க. நாங்களே நேரடியா நடவடிக்கை எடுக்க முடியாது..! நடிகைகளிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால் உடனடியாக எங்களிடம் சொல்லுங்கள் என்பதை மட்டும் வற்புறுத்தி சொல்கிறேன். ஆறப் போட்டு, கடைசியாகச் சொல்ல வேண்டாம். தற்போது நடிகர் சங்கம், பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த மாதிரியான புகார்களை விசாரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருக்கின்றன…” என்றார்.

“இந்தி படவுலக பாணியில் பாலியல் பிரச்சினையில் சிக்கியிருப்பதால் வைரமுத்துவுக்கு சினிமாவுலகில் செயல்பட தடை விதிக்கப்படுமா..?” என்று கேட்டதற்கு, “வைரமுத்து மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். வைரமுத்துவுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைப்பு தர மாட்டோம். ஆனால் அதற்கு முன்பாக அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம்..” என்று சொல்லி முடித்தார்.

Our Score