full screen background image

ஆண் தேவதை – சினிமா விமர்சனம் 

ஆண் தேவதை – சினிமா விமர்சனம் 

இந்தப் படத்தை சிகரம் சினிமாஸ் மற்றும் Child Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அ.பக்ருதீன், குட்டி மற்றும் இயக்குநர் தாமிரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் சமுத்திரக்கனியும், ரம்யா பாண்டியனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் ‘காளி’ வெங்கட், நிலானி, தமிழ்ச் செல்வி, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், எழுத்து, இயக்கம் – தாமிரா. இவர் ஏற்கெனவே ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தை இயக்கியவர்.

வீட்டுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டு வேலைக்கும் போய் வந்து குடும்பத்தைக் கட்டிக் காக்கும் பெண் தெயவங்களை ‘தேவதைகள்’ என்றும் சொல்வதுண்டு. அது போன்ற ஒரு ‘ஆண் தேவதை’யை அடையாளம் காட்டும் திரைப்படம் இது.

திருமணமான தம்பதிகளுக்குள் ‘ஈகோ’ என்னும் விஷம் பரவினால் அது அந்தக் குடும்பத்தை நிர்மூலமாக்கிவிடும். இன்றைக்கு குடும்ப நீதிமன்றங்களில் விவகாரத்துக்காக காத்திருக்கும் வழக்குகளில் 99 சதவிகிதம் இந்த ‘ஈகோ’ என்ற வார்த்தையினால் விளைந்தவையாகத்தான் இருக்கும்.

தங்களது குடும்பத்தைச் சிதைக்கும் முடிவை தம்பதிகள் ஒருபோதும் நாடக் கூடாது. குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்காகவாவது தங்களுடைய தனிப்பட்ட ஆசை, விருப்பங்களை தள்ளி வைத்துவிட்டு வாழ்வதுதான் சிறந்த குடும்ப வாழ்க்கை என்பதை இத்திரைப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் தாமிரா.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் என்னும் ஊரில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி. இதே சென்னைக்கு தனக்கென்று யாரும் இல்லாத நிலையில் கணிணி பொறியாளர் பணிக்கு வருகிறார் ஜெஸிக்கா என்னும் ரம்யா பாண்டியன்.

இருவருக்குமே யாரும் இல்லை என்ற நிலையில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். விரும்பியே திருமணமும் செய்து கொள்கிறார்கள். மிடில் கிளாஸ் பேமிலியாக குடும்பத்தை நடத்தத் துவங்கும்போது இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. ‘அகர முதல்வன்’ என்னும் பையனும், ‘ஆதிரா’ என்னும் பெண்ணும்..!

குழந்தைகள் வளர, வளர அவர்களை யார் பார்த்துக் கொள்வது என்கிற பிரச்சினை இவர்களுக்குள் எழுகிறது. ஒருவரின் சம்பாத்தியத்தில் குடும்பத்தைப் பராமரிக்க முடியாது என்பதால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி என்று யோசிக்கிறார்கள்.

ரம்யாவுக்கு மிகப் பெரிய கனவுகள் உண்டு. தான் சார்ந்த துறையிலேயே மேலும், மேலும் உயர வேண்டும். புதிய வீடு, கார் வாங்க வேண்டும். பிள்ளைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று அப்பர் மிடில் கிளாஸ் வர்க்க வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்கிறார். சமுத்திரக்கனியோ வரவுக்குள் செலவு செய்து குடும்பத்தை காப்பாற்றினாலே போதும் என்கிறார்.

‘தன்னால் வேலையை விட முடியாது’ என்கிறார் ரம்யா. குழந்தைகளுக்காக தான் வேலையை விட்டுவிட்டு அவர்களைப் பார்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார் சமுத்திரக்கனி. அன்று முதல் அந்த வீட்டின் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாகிறார்.

இப்போது ரம்யாவுக்கு மிகப் பெரிய சம்பளத்தில் வேறு இடத்தில் வேலை கிடைக்க.. பெரிய வீட்டுக்குக் குடி பெயர்கிறார்கள். டூ வீலர் வாங்குகிறார் ரம்யா. பிள்ளைகள் பெரிய பள்ளியில் படிக்கிறார்கள். கிரெடிட் கார்டுக்கு அடிமையாகி அதுலேயே வரவு, செலவுகளை நடத்துகிறார் ரம்யா.

ரம்யா வேலை செய்யும் நிறுவனத்தின் உயரதிகாரி ரம்யா மீது ஒரு கண் வைத்து அவரை படுக்கையில் வீழ்த்த நேரம் பார்க்கிறார். அதே நிறுவனத்தில் ரம்யாவுடன் வேலை செய்து வரும் சுஜாவும் ஆடம்பரப் பிரியையாக இருக்கிறார். தன் கணவர் ஒரு நாள் தன்னை டிராப் செய்ய முடியாது என்று சொன்னதற்காக இப்போதே பிஎம்டபிள்யூ காரை இன்ஸ்ட்டால்மெண்ட்டில் வாங்குகிறார்.

இவருக்கும் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பண உதவிகளை செய்கிறார் ரம்யா. ஆனால் சுஜா பல செலவுகளைச் செய்திருப்பதால் கடன் தொகை ஏறியிருக்கிறது. அந்தக் கடனைக் கட்டச் சொல்லி வீட்டுக்கு வரும் முரடர்களின் அநாகரீக செய்கையினால் மனமுடைந்த சுஜா தற்கொலை செய்து கொள்கிறார்.

இதையடுத்து இந்தப் பிரச்சினை ரம்யாவின் வீட்டிலும் எதிரொலிக்கிறது. அளவுக்கு மீறிய ஆடம்பரமும், தகுதிக்கு மீறிய செலவுகளும் குடும்பத்தைச் சிதைத்துவிடும் என்று அறிவுறுத்துகிறார் சமுத்திரக்கனி. ரம்யா அதைக் கேட்காமல் தனக்கு இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வேண்டும் என்கிறார்.

வாக்குவாதம் வலுத்து வார்த்தைகள் தடிக்கின்றன. “நீ ஒரு நாள் வெளில போய் வேலை பார்த்து பிள்ளைகளை காப்பாத்து.. முடியலைன்னா வா.. உன்னை சேர்த்துக்குறேன்…” என்று அவரது தன்மானத்தைச் சுரண்டி பார்ப்பதுபோல வார்த்தைகளை வீசுகிறார் ரம்யா. இதனால் பெரிதும் அவமானப்படும் சமுத்திரக்கனி, தனது மகள் ஆதிராவை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

அங்கே மகன் அகர முதல்வர் அம்மாவுடன் இருக்க.. இங்கே மகள் ஆதிராவுடன் தெருத் தெருவாக சுத்துகிறார் சமுத்திரக்கனி. முடிவில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த ‘ஆண் தேவதை’ திரைப்படத்தின் கதை.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த ‘The pursuit of happiness’ என்கிற படத்தின் கதைக் கருவைத்தான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் தாமிரா.

சமுத்திரக்கனி படம் என்றாலே அது தேசப்பற்றோ அல்லது விவசாயிகளின் அழுகையோ அல்லது சமூகத்தின் குரலோதான் ஒலிக்கும். இதில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் பிரச்சினைகளை எதிரொலிக்க வைத்திருக்கிறார்.

துவக்கக் காட்சியிலேயே குழந்தைகளுக்கு ‘குட் டச்’ எது ‘பேட் டச்’ எதுவென்று சொல்லும்போதே நமது கவனத்தை ஈர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஆண்கள்தான் வேலைக்குப் போக வேண்டுமா என்ன..? குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள அவர்களால் முடியாதா என்பதற்கு இந்தக் கேரக்டரை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கேரக்டருக்கு இவர்தான் என்பதை முடிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். முதல் காட்சியில் குழந்தையுடன் சென்னையில் தெருத்தெருவாக அல்லல்பட்டு அலையும் தருணத்தில் என்னவோ, ஏதோ… என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்பு போகப் போக பிளாஷ்பேக் உத்தியில் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தாமிரா.

காலையில் பிளாட் பெண்களுடன் வாக்கிங், யோகா, சிரிப்பு பயிற்சி, ஓய்வு நேரத்தில் சீட்டாட்டம் என்று சக பெண்ணாகவே தன்னைப் பாவித்துக் கொண்டு பாலியல் வேற்றுமையில்லாமல் பழகும் சமுத்திரக்கனியின் கேரக்டர் ஸ்கெட்ச் மிக அழகு.

பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது.. மனைவியை சமாதானப்படுத்த முயல்வது.. தனது தன்மானத்திற்காக வீட்டை விட்டு வெளியில் வந்து தெருவில் திரியும் அந்த நேரத்தின் நடிப்பில் கொஞ்சம் பரிதாபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார். ‘காளி’ வெங்கட்டின் அறிவுரையை ஏற்காமல் சட்டென முடிவெடுத்து “போடா” என்று சொல்லிவிட்டுப் போகும் கோபத்தையும் காட்டியிருக்கிறார்.

ஹோட்டலில் தன்னை அவமானப்படுத்தும் மனைவியின் நண்பர்களுக்கு நச்சென்று பதில் சொல்லும்விதம் இதுதான் சமுத்திரக்கனி என்று சொல்ல வைக்கிறது. மனைவியிடம் அவமானம்பட்டாலும் அதை அங்கே காட்டிக் கொள்ளாமல் வீட்டில் வந்து கோபத்துடன் வினவும் காட்சிக்காக இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

ஹோட்டல் அறையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை திடீரென்று காப்பாற்ற முயலும் தருணத்தில் அவரது அப்பாவி நடிப்பை ரசிக்க முடிகிறது. வெல்டன் பிரதர்..!

ரம்யா பாண்டியன் கணிணி பொறியாளர் கேரக்டருக்கு மிகப் பொருத்தம். தனது வாழ்க்கையின் லட்சியமே வேறு என்று சொல்லும் அவரது நடத்தையும், பேச்சும், உடல் மொழியுமே அவரது நடிப்பை காட்டிவிட்டது.

கடன் கொடுத்தவர்களை அவர் சமாளிக்க முடியாமல் திணறுவதை மிக இயல்பாகக் காட்டியிருக்கிறார். அதற்காக இந்த அளவுக்கு இறங்கி அந்தக் கொடூரத்தைக் காட்ட வேண்டுமா இயக்குநரே..? கொஞ்சம் தடம் மாறினாலும் வாழ்க்கை போய்விடும் என்ற நிலையில் நிறுவனத்தின் உயரதிகாரியை ரம்யா புறக்கணிக்கும் காட்சியிலும் அப்பாடா என்று சொல்ல வைத்திருக்கிறார்.

தூக்கி முத்தம் கொடுக்க வைக்கிறார் ‘ஆதிரா’வாக நடித்திருக்கும் பேபி மோனிகா. ‘இவ்ளோ பெரிய ஊர்ல நமக்குன்னு யாருமே இல்லையாப்பா…?’ என்று அவள் கேட்கும் கேள்வியே சாட்டையடி கேள்வி. எப்பேர்ப்பட்ட சமூகத்தில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாசத்தைப் பொழிவதிலும், அம்மாவிடம் உண்மையைச் சொல்வதிலும், ‘கடவுளைத் தேடி போறோம். அவர் நிச்சயம் எங்களுக்குத் தருவார்’ என்கிற பாஸிட்டிவ் செய்தியை ஆதிரா மூலமாக சின்ன குழந்தைகள் மனதில் விதைத்து அதன் மூலமாக அவர்களையும் தன்னம்பிக்கை உடையவர்களாக ஆக்கும் இந்த திரைக்கதைக்காக இயக்குநருக்கு மேலும் ஒரு பாராட்டு..! அகர முதல்வனாக நடித்திருக்கும் அந்தச் சிறுவனும் மிக அழகாக நடித்திருக்கிறான். பாராட்டுக்கள்..!

பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் வீடு கொடுத்து அரவணைக்கும் நல்ல பண்பாளராக இஸ்லாமியர் ராதாரவி நடித்திருக்கிறார். ‘யார்கிட்ட சண்டை போட்ட.. உன் மனைவிகிட்டதான.. போய் ஸாரி சொல்லு. மன்னிப்புக் கேளு.. நீ இறங்கிப் போ.. எதுவும் தப்பு இல்ல..’ என்று இந்தக் காலத்துக்குத் தேவையான ஒரு அறிவுரையை வழங்கி தனது கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார் ராதாரவி.

சமுத்திரக்கனியின் நண்பராக வரும் ‘காளி’ வெங்கட் ஒரேயொரு டயலாக்கில் ஒட்டு மொத்த தியேட்டரையும் கலக்கிவிட்டார். “நமக்கு ஒரு சிறந்த அடிமை கிடைச்சிட்டான்னா பொம்பளைங்க அவனை லேசுல விடவே மாட்டாங்க மாப்ளை. நீ போய் உன் வொய்பை பார்த்து பேசு…” என்று அட்வைஸ் சொல்வது படு நக்கல்தான் என்றாலும் யதார்த்தமானதுதான்..!

சுஜா வாருணியின் கேரக்டர்படி அவர் கெட்டவராகத்தான் காட்டப்படுகிறார். ரம்யாவை படுக்கைக்கு அழைக்கும் உயரதிகாரிக்கு ‘பெஸ்ட் ஆப் லக்’ சொல்லும் சுஜாதான் பின்பு ரம்யாவிடமே பணம் கடன் கேட்டு வாங்குகிறார். அந்தக் கடனையும் கட்ட முடியாமல் செத்துப் போகிறார். இப்போது பார்வையாளர்களுக்கு ‘பாவமாச்சே’ என்ற பீலிங் எப்படி வரும்..? உயரதிகாரியுடன் சுஜா, ரம்யா பற்றி பேசும் அந்த ஒரு காட்சியை மட்டும் நீக்கிவிட்டால் நிச்சயமாக பலன் கிடைக்கும்..!

கடன்காரர்கள் வீட்டுக்கு 2 பூட்டு போடுகிறார்கள். அதை உடைத்துவிட்டுப் போகலாமே..? யார் கேட்கப் போகிறார்கள்..? அத்தனை பெரிய பிளாட்டில் பக்கத்து வீட்டில் யாருமே இல்லையா.. யாருமே உதவிக்கு வரவில்லையா.. அனைவருடனும் சமுத்திரக்கனி நட்பாக இருப்பதாக திரைக்கதை சொல்கிறதே.. இப்போதும் லாண்டரி செய்யும் குடும்பம்தான் அவர்களுக்குத் துணை என்று சொல்லியிருப்பது ஓவரான செண்டிமெண்ட்டை கிளப்ப முயற்சியோ என்று சந்தேகப்பட வைக்கிறது..!

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு தரம். சின்ன வீட்டைக்கூட மிக அழகாகக் காட்டியிருக்கிறார். காட்சிகளின் கோணத்தையும் ரசிக்கும்விதமாக வைத்திருக்கிறார்கள். ஜிப்ரானின் இசையில் ‘நிகரா’ பாடல் கவனத்தை ஈர்க்கிறது..! ‘மலரின் நறுமணம்’, ‘பேசுகின்றேன் பேசுகின்றேன்’ பாடல்கள் மிக எளிய தமிழில் இருந்தாலும் அழகழகான காட்சிகளின் பார்வையில் காதோடு கேட்காமலேயே போய்விட்டது..!

“என்னடா.. தமிழ்ச் சினிமாவில் குடும்பப் படம் எதுவுமே வருவதே இல்லையே…” என்கிற ஏக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொண்டாட வந்திருக்கிறது இத்திரைப்படம்.

இந்தக் கால தம்பதிகளுக்கு ஏற்ற ஒரு அறிவுரையை இத்திரைப்படம் சொல்லியிருக்கிறது. அதனை புரிந்து உணர்ந்து கொண்டால் இந்தத் தமிழ்ச் சமூகமும் பிழைக்கும்..!

‘ஆண் தேவதை’ – பெண்களே கொண்டாட வேண்டிய திரைப்படம்..!

Our Score