full screen background image

“காவிரி பிரச்சினையை தீர்க்கத்தான் அரசு இருக்கே..? நாங்க எதுக்கு போராட்டம் நடத்தணும்..?” – நடிகர் விஷால் கேள்வி..!

“காவிரி பிரச்சினையை தீர்க்கத்தான் அரசு இருக்கே..? நாங்க எதுக்கு போராட்டம் நடத்தணும்..?” – நடிகர் விஷால் கேள்வி..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் தீபாவளியை முன்னிட்டு பத்திரிகை நண்பர்களை நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் சந்தித்தார்.

துவக்கத்தில் அவர் பேசும்போது, “உங்களை ஒரு நடிகராகவோ, நடிகர் சங்கத்தின் செயலாளராகவோ நான்  சந்திக்க வரவில்லை. சக நண்பனாகவே சந்திக்க வந்திருக்கிறேன்..” என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு பின்பு நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், நடிகராகவும் மாறி, மாறி பேசினார்.

அவர் மேலும் பேசும்போது, “கடந்த பத்தாண்டுகளில் இது மறக்க முடியாத ஆண்டு..   மறக்க முடியாத தீபாவளி சந்திப்பு. கடந்த ஒரு மாதத்தில் நான் இவ்வளவு பிஸியாவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. நான் தற்போது இரண்டு வேலைகளை பார்த்து வருகிறேன். ஒரு நடிகராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் பணியாற்றி வருகிறேன். நடிகராக நடிகர் சங்கத்தின் செயலாளராக பொறுப்புகள், கடமைகள் எனக்கு நிறைய இருக்கிறது. .

கடினமாக உழைத்தால் பலன் உண்டு, வெற்றி நிச்சயம். இதுதான் என் தாரக மந்திரம். இதுதான் எப்போதும் எனக்குள் நான் சொல்லும் என் தாரக மந்திரம். அதற்குக் கிடைத்த வெற்றிதான் அக்டோபர்-18-ல் எங்களுக்குக் கிடைத்தது.

எனக்காக.. எங்களது பாண்டவர் அணிக்காக உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் கோயில்கள். சர்ச்கள். மசூதிகளில் பிரார்த்தனை நடத்தியிருக்காங்க.. இதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன். என் அம்மாவிடம் யார், யாரோ போன் செய்து எனக்காகப் பிரார்த்தனை செய்ததைக் கூறியிருக்கிறார்கள். அம்மா சொல்லிக் கேட்டபோது சத்தியமா நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.

இப்போது எனக்கு இரண்டு வேலைகள் இருக்கின்றன என்றாலும் முதலில் என் வீட்டில் சரி.. பையன் ஆசைப்படுறான்னு சொல்லி விட்டுட்டாங்க. ஆனால் இப்போது எப்போ போன் செஞ்சாலும் ‘சங்கத்துல இருக்கேன்’னு சொல்றேன்.. ‘சாப்பிட வா’ன்னு கூப்பிட்டால்.. ‘சங்கத்துலேயே சாப்பிட்டுட்டேன்’னு சொல்லிடறேன்.. இதுனால ‘சங்க தேர்தல்ல நிக்கவிட்டது தப்பா போச்சே’ன்னு இப்போ எங்கம்மா சொல்றாங்க..

நான் நடித்து அடுத்து வரப் போகும் படம் ‘கதகளி.’ கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி. மத்த போர்ஷனெல்லாம் முடிஞ்சிருச்சு.. இந்த டிசம்பருக்கே கொண்டு வரலாம்னு நினைச்சோம். ஆனால் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நிறைய இருக்கு. எதையும் அரைகுறையா செய்யாம, நிதானமா செய்யலாமேன்னு யோசிச்சு அடுத்த வருஷ பொங்கலுக்கு கொண்டு வரலாம்னு இருக்கோம். ‘கதகளி’ ஒரு புதுவிதமான த்ரில்லர் படமாக இருக்கும்.

இதுக்கடுத்து லிங்குசாமி ஸார் இயக்கத்துல ‘சண்டக்கோழி-2′ தொடங்க இருக்கிறது. இது எப்படியும் ஏப்ரல், மே ஆயிரும்னு நினைக்கிறேன். இதுக்கு நடுவுல கொம்பன் முத்தையாவின்’ மருது’ படத்துல நடிக்கப் போறேன்.. இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஒரு படம் முடிந்துதான் அடுத்த படம் இதுதான் என் முடிவு. ‘மதகஜராஜா’  வெளிவருமா என்று தெரியவில்லை. வந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். 

இந்தப் படங்களை அடுத்து ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க இருக்கிறேன். அது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் செய்ய முடிகிற படமாக இருக்கும். அது பற்றிய விவரங்களை  விரைவில் வெளியிடுவேன். 

நடிகர் சங்கத்தின் சார்பாக தீபாவளி பரிசை வீடு வீடாக கொண்டு போய் கொடுத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி. வாங்கிக்கிட்ட அவர்களுக்கும் மகிழ்ச்சி. இப்போ இந்த அரங்கத்துக்குள்ள நுழையறதுக்கு முன்னாடி ஸ்ரீப்ரியா மேடம் போன் செய்து தாய் வீட்டு பரிசு வந்தததா சொன்னாங்க. மனசுக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து நடிகர் சங்கத்தின் கட்டட வேலைகள் மும்முரமாக நடக்கப் போகிறது. ஒப்பந்த ரத்து பத்திரத்தை சரத் சார் எங்ககிட்ட கொடுத்துட்டார். நாங்களும் அவங்ககிட்ட பேசி இடத்தை மீட்டுட்டோம். இனி பிரச்சினை இருக்காது. தடை வராது. எல்லாம் பாசிடிவ்வாத்தான் போய்க்கிட்டிருக்கு. சங்கத்தின் கணக்கு வழக்குதான் இன்னும் சரி பார்த்து முடியவில்லை. ஆடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் முடிச்சிருவோம்.

நடிகர் சங்க இடத்தில் விரைவில் புதிய கட்டிடம் எழுப்பப்படும். அது நிச்சயம் கமர்ஷியல் காமப்ளெக்ஸ் மாதிரி இருக்காது. நடிகர் சங்கத்துக்கான. தேவைக்குட்பட்ட விஷயமாகவே அது இருக்கும். நிச்சயம் யாரையும் பாதிக்காதபடிதான் கட்டப் போறோம்.

முக்கிய நடிகர்கள் அனைவரும் நடிக்க ஒரு படம் தயாரிக்கப்பட்டு,  அதில் வரும் லாபம் கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் அது சும்மா கடமைக்கு எடுக்கப்பட்ட படமாக இருக்காது. எப்போதும் பார்த்து ரசிக்கும் வெற்றிப் படமாக இருக்கும். கதை இயக்குனர் எல்லாம் முடிவான பிறகு பொருத்தமான கேரக்டர் இருந்தால் கமல் சார்கூட அதில் நடிப்பார். 

இன்னும் இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதுதான் என்னுடைய முதல் திட்டம். கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும். என்னுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. நிச்சயம் காதல் திருமணம்தான். நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதை அதுக்கான நேரம் வரும்போது நானே உங்களிடம் அறிவிப்பேன். நடிகையைக் காதலிப்பதுல தப்பில்லையே..?..” என்று ஒரே மூச்சாக அனைத்து விஷயங்களையும் பேசி முடித்தார் விஷால்.

‘மருது’ படத்தில் ராதாரவி நடிக்கப் போகிறார் என்று சமீபமாக பல செய்திகள் உலா வருவதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “ராதாரவி நடிக்கிறாரான்னு எனக்கு தெரியலை. அது இயக்குநரின் முடிவு. நான் தலையிடமாட்டேன். அப்படி அவருடன் நடிக்கும் சூழ்நிலை வந்தால் அதை நான் மறுக்க மாட்டேன். கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு தொழில் என்பது வேறு. ராதாரவியுடன் மட்டுமல்ல, சரத் சாருடன்கூட இணைந்து நடிப்பேன். போட்டியெல்லாம் தேர்தலோட முடிஞ்சு போச்சு..” என்றார்.

“நடிகர் சங்கம் பொதுவான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளாது..” என்று சொல்லியிருக்கிறீர்களே என்று கேள்வியெழுப்ப.. “நடிகர் சங்கத்தில் அரசியல் கிடையாது. இங்கே அரசியல் நுழைய வேண்டாம். அரசாங்கம் என்று ஒன்று செயல்படும்போது எந்த அரசியல் சார்ந்த விஷயத்திலும் நடிகர் சங்கம் பங்கெடுக்காது ஈடுபடாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

இதைத் தவறாகப் புரிந்து கொண்டு சிலர் பேசுகிறார்கள். என் வீட்டுக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள்.. நான் அவங்ககிட்ட சொல்றது என்னன்னா.. இப்படி போராட்டம் நடத்துற நேரத்துல நாலு ஏழை பிள்ளைகளை படிக்க வையுங்க. அது போதும்..” என்றார்.

“மக்கள்தான் ரசிகர்கள். அவர்களால்தான் நீங்களும் வாழுறீங்க..? அவங்களுக்காக போராட மாட்டோம்ன்னு சொன்னால் எப்படி..?” என்று திருப்பிக் கேட்டதற்கு.. “அதுக்குத்தான் அரசு இருக்கே..? காவிரி பிரச்சினையை எடுத்துக்குங்க. அது மாநில அரசுதான் தீர்க்கணும். இதுல நடிகர் சங்கம் தலையிடறதுக்கு என்ன இருக்கு..? இதே மாதிரிதான் ஈழப் போராட்டமும்.. அரசுகள் செய்ய வேண்டிய வேலையை அவங்கதான் செய்யணும். நாம செய்யணும்னு நினைக்கக் கூடாது.. அதுனாலதான் அதுல நாங்க இனிமேல் தலையிட விரும்பவில்லைன்னு சொல்றோம்..” என்றார் விடாப்பிடியாக..!

அரசுகள் செயலற்று இருப்பதால்தானே விவசாயிகளே தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். அரசுகளின் மெத்தனத்தைக் கண்டிப்பதில் நடிகர்களுக்கும், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற முறையில் ஒரு அக்கறை வேண்டாமா..?

தங்கள் மீது அக்கறையில்லாத இவர்களை எதிர்த்து, காவிரி டெல்டா மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் தியேட்டர்களை மூடும்படி போராட்டம் நடத்தினால் இவங்க என்ன செய்வாங்களாம்..?

யோசிச்சு பேசுங்கப்பா..!

Our Score