தென்னிந்திய நடிகர் சங்கம் மீண்டும் பதட்டத்தில் அடிபடுகிறது. நடிகர் சங்கக் கட்டட விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று சொல்லித்தான் சரத்குமார், ராதாரவி அண்ட் கோ-வை தேர்தலில் வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது விஷால் டீம்.
இப்போது விஷால் டீம் மீதே ஊழல் புகார் எழுந்துள்ளது. ‘சவுக்கு’ என்கிற ஒரேயொரு படத்தில் நடித்திருக்கும் வாராகி என்ற நடிகர்தான் இந்தப் புகாரை எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் பத்திரிகையாளர்களிடத்தில் பேசுகையில், “கடந்த தேர்தலில் விஷால் அணிக்குத்தான் நானும் வாக்களித்தேன். ஆரம்பத்திலிருந்தே சங்கத்தின் நடவடிக்கைகள் சரியில்லை. முன்பு இருந்த நிர்வாகம் செய்த ஊழலைவிட இரு மடங்கு அதிகமான ஊழலை இந்த புதிய நிர்வாகமும் செய்திருக்கிறது.
நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விடும்படி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அதனை பகிரங்க டெண்டராகவிடாமல் நடிகர் விஷாலுக்கு தெரிந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள்.
நட்சத்திர கிரிக்கெட் நடத்த 13 கோடி ரூபாயை சன் டிவி கொடுத்தது. அதில் இப்போது 7 கோடிதான் இருப்பதாகக் கணக்கு காட்டுகிறார்கள் நிர்வாகத்தினர். 3 கோடி கிரிக்கெட் போட்டி நடத்த செலவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். மீதி 3 கோடிக்குக் கணக்கு இல்லை.
இது குறித்து பல முறை நடிகர் சங்கத்தில் கடிதம் மூலமாக விளக்கம் கேட்டேன். இதுவரையிலும் சரியான பதில் இல்லை. நேற்றைக்கு நேரில் வரச் சொல்லியிருந்தார்கள். சென்றேன். ஆனால் அங்கே நிர்வாகிகள் யாருமே இல்லை. அங்கேயிருந்தவர்கள் என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்…” என்றார்.
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நடிகர் விஷால் இது குறித்து பேசுகையில், “நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் பத்து நாட்களில் நாங்களே வெளியிடுவோம்.
வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம்.. அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
புதிய கட்டிடம் கட்ட எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ.விடமிருந்து அனுமதியே கிடைக்கவில்லை. அப்புறம் எப்படி டெண்டர் விடமுடியும்..? இதுவரையில் டெண்டர் விடவில்லை என்பதுதான் உண்மை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை.
தயாரிப்பாளர் சங்கத்தை அவமரியாதை செய்ததாக அவர்கள் என் மீது நடிவடிக்கை எடுக்கப் போகும் செய்தியில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை. வந்தால் பார்க்கலாம்…” என்றார் விஷால்.










