‘சாயம்’, ‘மாய நதி’, ‘பட்டதாரி’ உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்து முத்திரை பதித்தவர், நடிகர் விஜய் விஷ்வா. தற்போது இவர் பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
லோகு இயக்கத்தில் சோபிலால் தயாரிக்கும் ‘பரபரப்பு’ என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் விஷ்வா நடிக்கிறார். அதேபோல, விஜயன் இயக்கத்தில், கே.வி.மீடியா செந்தில் தயாரிக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் காதல் சுகுமார், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட பலர் தோன்றுகின்றனர். மேலும் கெவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் ‘கும்பாரி’ படத்திலும் விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், சந்தோஸ் இயக்கத்தில் முருகா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக விஜய் விஷ்வா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் தொடர்ந்து 25 நாட்கள் இரவிலேயே எடுக்கப்பட்டது.
பல படங்களில் நடித்து வருவது குறித்து விஜய் விஷ்வா பேசுகையில், “திரைத்துறையில் இருப்பதற்கான ஒரேயொரு அடையாளமே இங்கே இயங்கிக் கொண்டேயிருக்க இருப்பதுதான். இதற்கான வாய்ப்பினை அளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும், இறை சக்திக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்..” என்றார்.
இந்நிலையில் ‘மாய நதி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக எம்.ஜி.ஆர்., சிவாஜி அகடமி, விஜய் விஷ்வாவுக்கு சிறந்த நடிகர் விருதினை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









