நேற்று இரவு சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற களேபரத்தை அடுத்து ‘கத்தி’ படம் நாளை ரிலீசாகுமா இல்லையா என்பதே தெரியவில்லை.
இந்த நேரத்தில் நடிகர் விஜய் திடீரென்று ‘கத்தி’ பட சர்ச்சை சுமூகமாக முடிவடைந்துவிட்டதாகவும், இதற்கு உதவியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்..!
நடிகர் விஜய்யின் அறிக்கை இதுதான் :
மாண்புமிகு அம்மாவுக்கு நன்றி!
என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்!
சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் ‘கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ‘லைகா’ நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து ‘கத்தி’ படத்தின் விளம்பரங்களில் ‘லைகா’ நிறுவனத்தின் பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர்.
இதனால், இந்த பிரச்சனை இப்போது சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே ‘கத்தி’ படம் பார்க்க எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் ‘கத்தி’ திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
‘கத்தி’ திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல்துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘லைகா’ பெயரை நீக்கிய படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இவ்வாறு தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.