full screen background image

“என் வெற்றிக்குப் பின்னால் அவமானங்கள்தான் இருக்கு..” – நடிகர் விஜய் பேச்சு

“என் வெற்றிக்குப் பின்னால் அவமானங்கள்தான் இருக்கு..” – நடிகர் விஜய் பேச்சு

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘புலி’.

நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமைய்யா மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.. சிறப்பு விருந்தினர்களாக விஜய்யை வைத்து படம் இயக்கிய பல இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள்.

puli movie audio function stills

இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது, நேற்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து பழைய இயக்குநர் நண்பர்களை மறக்காமல் ‘புலி’ இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்ததே காரணம்.

விழாவில் கடைசியாக பேசிய நடிகர் விஜய். “ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திர படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு… அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என்கிட்ட இந்த கதையை கொண்டு வந்தாரு,

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கேயிருக்கும் ஸ்ருதிஹாசன்.. மும்பையில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது குஷ்பு ஹன்ஸிகா.. அப்புறம் படத்துல ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனால் முக்கியமான கேரக்டர். இதுல நடிச்ச நந்திதாவை ரொம்பவே பாராட்டணும்.

கடைசியா ஒரு அருமையான கேரக்டர்ல.. நல்ல, அழகான, போல்டான தனது நடிப்பால இந்தியாவையே கட்டிப் போட்ட நம்ம ஊர் சிவகாசி பட்டாசு ஸ்ரீதேவி மேடம்..

இன்னைக்கு இருக்குற ஹிரோக்களிடம் அண்ணனாக பழகிக் கொண்டிருப்பவர் பிரபு சார்.. அதேமாதிரி ஒரு ஹிரோ இன்னொரு ஹிரோ படத்துல வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனா கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சார் இதுக்கு ஒத்துக்கிட்டாரு… அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி.  மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சின்னு ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் சேர்ந்தது இந்தப் படம்.

’23-ம் புலிகேசி’ படத்துல நம்மையெல்லாம் சிரிக்க வைத்த இயக்குநர் சிம்புதேவனின் டீம் இந்த புதிய முயற்சில ஈடுபட்டு நம்மையெல்லாம் ஜெயிக்க வைக்கணும்னு வந்திருக்காங்க. இந்தியாலேயே மிகப் பெரிய ஒளிப்பதிவாளர் நட்டி ஸார்.. அவரே ஹீரோவா ‘சதுரங்க வேட்டை’ ஆடினாரு, இப்ப இதுல கேமரா மூலமாக புலி வேட்டை ஆடியிருக்கிறார்.

அடுத்து ஒருத்தரை பற்றி நான் சொல்லியே ஆகனும், அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் எப்பவுமே ஒரு எனர்ஜி அவர்கிட்ட தெரியும், அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இப்ப இந்த படத்துல தாரை தப்பட்டையெல்லாம் வச்சு ‘புலி’யை விரட்டுவாங்க, ஆனா இப்ப தாரை தப்பட்டையெல்லாம் வைத்து ‘புலி’யை ஆட வச்சிருக்காரு தேவிஸ்ரீபிரசாத்.. அவருக்கு என் நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

பொதுவா பெரிய தொழிலதிபர்களெல்லாம் வருஷா வருஷம் இடம் மாறிக்கிட்டேயிருப்பாங்க. யார் லிஸ்ட்ல பர்ஸ்ட்டுன்னு.. ஆனா இப்போவரைக்கும் முதலிடத்திலேயே இருக்கார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். கலை இயக்குநர் முத்தையா பிரமாண்டமான அரண்மனை செட்டுக்களை அழகா போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்த பிரம்மாண்டத்திற்கும் முக்கியக் காரணம் என் தயாரிப்பாளர் ஷிபுவும், செல்வக்குமாரும். இன்னொரு வீர்ர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவருக்குள்ள ஒரு இயக்குநரும் இருக்கார்.

பொதுவாக பரீட்சை எழுதுறவங்க அதிகமாவும், மார்க் போடுறவங்க கம்மியாவும்தான் இருப்பாங்க. ஆனால் இங்க பரீட்சை எழுதறவங்க கம்மியாவும், மார்க் போடுறவங்க அதிகமாவும் இருக்காங்க. இந்தப் படத்துக்கு எத்தனை மார்க்குன்னு பரீட்சை எழுதின நாங்க சொல்லக் கூடாது. மார்க் போடுற நீங்கதான் சொல்லணும். படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க. தியேட்டர்ல..!

தயாரிப்பாளர் நிறைய செலவு பண்ணி படத்தைத் தயாரிச்சு கொண்டு வர்றாங்க. ஆனால் சில பேர் திருட்டுத்தனமா போன்ல எடுத்து நெட்ல போடுறாங்க. இதுனால என்ன கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு தயாரிப்பாளர் நிறைய பிளான் பண்ணி.. எந்த டைம் ஷூட் செய்யணும். எந்த டைம் ரிலீஸ் செய்யணும்… இப்பத்தான் என்னென்னமோ சொல்றாங்களே.. பர்ஸ்ட் லுக்.. செகண்ட் லுக்.. டீஸர்.. டிரெயிலர்ன்னு நிறைய இருக்குன்னு சொல்றாங்க.

இதுல நான் என்ன சொல்றேன்னா.. இது மாதிரி தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு தயாரிக்குற படத்தை இவங்க திருட்டுத்தனமா ரிலீஸ் செஞ்சு ஒரு குழப்பு குழப்பி, இதுனால இவங்க என்னத்த சாதிக்கிறாங்க.. ஜெயிக்கிறாங்கன்னு தெரியலை. இது அம்மா வயித்துல ஆரோக்கியமா வளர்ற குழந்தையை சிசேரியன் பண்ணி கொலை பண்ற மாதிரியிருக்கு.

எனக்கு உண்மையா வெறுக்க தெரியும். ஆனா பொய்யாக நேசிக்க தெரியாது. நமக்கு முதுகுக்கு பின்னாடி பேசுறவங்களை பத்தி நாம கவலைப்படவே கூடாதுங்க. உயிரோட இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும்,

எல்லாரும் சொல்வாங்க.. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஆணோ, பெண்ணோ இருப்பாங்கன்னு. ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னால நிறைய அவமானங்கள்தான் இருக்கு.

பில்கேட்ஸ் பத்தி நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சின்ன வயசுல.. அவரோட ஸ்கூல் டைம்ல.. நிறைய பேர்.. அவரைப் பத்தி குத்தம் சொல்லிக்கிட்டே.. குத்திக் காட்டிக்கிட்டேயிருப்பாங்களாம். அவர் தன்னோட குறைகளை சரி பண்ணிக்கிட்டேயிருப்பாராம். இன்னிக்கு உலகத்துலேயே மிகப் பெரிய தொழிலதிபரா இருக்கார் பில்கேட்ஸ். அவரைக் குத்தம் சொன்னவங்கள்லாம் இப்போ அவரோட கம்பெனில ஊழியர்களா வேலை பார்க்குறாங்களாம். ‘அப்போ நீ பில்கேட்ஸா?’ன்னு கேக்குறீங்க. அதான.. நான் பில்கேட்ஸ் இல்லங்க.. ச்சும்மா ஒரு தகவல் நம்ம காதுக்கு வந்துச்சு. நல்ல நியூஸா இருந்துச்சு. ஷேர் பண்ணிக்கலாமேன்னு நினைச்சேன். அவ்ளோதான். இதை இங்கேயே மறந்து விட்ரணும்.. ஏன்னா நமக்கும் நாலு நல்ல விஷயம் தெரியும்ன்றது எல்லாருக்கும் தெரியணும்ல்ல.

நாம எல்லாத்துலேயும் அக்கறையில்லாமல் இருப்பதாக ஒரு சின்னக் குற்றச்சாட்டு இருக்கு. இதை நான் ஒத்துக்க மாட்டேன். அது எல்லா விஷயத்திலேயும்.. கிரிக்கெட் முதற்கொண்டு.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி.. நாம விளையாட்டா எடுத்துக்க வேண்டிய மேட்டரை சீரியஸா எடுத்துக்குறோம். சீரியஸா எடுத்துக்க வேண்டிய மேட்டரை விளையாட்டாகூட எடுத்துக்க மாட்டேன்றோம்.

இந்த நேரத்துல ஒண்ணு ஞாபகம் வருது. ‘பல்லாண்டு வாழ்க’ன்னு ஒரு படம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிச்ச படம். அந்தப் படத்தோட கதை என்னன்னா கொடூரமான கொலை கைதிகளை திருத்தறதுதான். அந்தப் படத்துல ஒரு சீன் வரும். சில கல்லூரி மாணவர்கள் பேசிக்கிட்டே போவாங்க.. இதெல்லாம் நடக்குற காரியமில்லை.. யாரையும் திருத்த முடியாதுன்னு சொல்வாங்க. அப்போ எம்.ஜி.ஆர். ஒரு பேப்பர்ல ஒரு முகத்தை வரைஞ்சு, இன்னொரு பக்கம் இந்தியா மேப்பையும் வரைஞ்சு அந்த பேப்பரை கிழிச்சு கீழ போடுவாரு.

அந்த மாணவர்களை அழைத்து அந்தப் பேப்பர்ல இந்தியாவோட மேப்பை அமைக்கச்  சொல்வாரு.. அவங்க செஞ்சு பார்த்துட்டு வரலைன்னு சொல்வாங்க. அந்த மனுஷனோட முகத்தை ஒண்ணா சேருங்கன்னு சொல்வாரு. கண்ணு, காது, மூக்கு, வாய்ன்னு அதை அவங்க ஒண்ணா சேர்ப்பாங்க. இப்போ என்ன வருதுன்னு பாருங்கம்பாரு. இப்போ பேப்பர்ல இந்தியா மேப் இருக்கும். அப்போ அவர் சொல்வாரு.. ‘ஒரு மனுஷனை திருத்தினாலே இந்தியா மேப்பே சரியாகுது. இதே மாதிரி ஒவ்வொரு மனுஷனும் திருந்தினா இந்தியாவே திருந்திரும்’பாரு..

நான் ஏன் இதை இங்க வந்து பேசுறேன்னே எனக்கே தெரியலை.  இந்த படம், இந்தக் கதை, இந்த சீன், இந்த டயலாக் ரொம்ப நாளா மனசுல இருந்துச்சு. இதை உங்தகிட்ட ஷேர் செய்யணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்.

எனக்கு, என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வச்சு அழகு பார்க்குறதுதான் பிடிக்கும்.. என்ன நண்பா நான் சொல்றது சரியா…? மேலும் இந்த விழாவுக்கு இவ்வளவு தூரம் வந்து வாழ்த்திய அனைவருக்கும்.. முக்கியமாக டி.ஆர். சாருக்கும் என் நன்றி..” என்றார்.

Our Score