full screen background image

“தேவையில்லாத போராட்டங்கள் வேண்டாம் நண்பா…” – ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்..!

“தேவையில்லாத போராட்டங்கள் வேண்டாம் நண்பா…” – ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்..!

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மெர்சல்.’ வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ், இயக்குநர் பார்த்திபன், நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவுக்கு முன்பாகவே வந்த இளைய தளபதி  விஜய், வாசலில் நின்றபடியே விழாவுக்கு வந்த அனைத்து பிரபலங்களையும் கை குலுக்கி வரவேற்றார்.

vijay-1

படக் குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் விழா அரங்கில் குவிந்திருந்தனர். மேடையில் ஒவ்வொரு நட்சத்திரமும் வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

கடைசியாக பலத்த கரகோஷத்துடன் மேடையேறினார் நடிகர் விஜய். அவர் பேசும்போது, “முதலில் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் முரளி ஸாருக்கும், தேனாண்டாள் பிலிம்ஸுக்கும் எனது நன்றிகள்..!

திரையுலக வாழ்க்கையில் என்னுடைய 25-வது வருடத்தை போலவே ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இது 25-வது வருடம். இந்த வருடத்தில் அவருடன் நான் பணியாற்றியதில் எனக்கும் சந்தோஷம்.

vijay-atlee-1

உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்குனாரு. இப்போ ‘மெர்சல்’க்கு மெட்டு போட்டிருக்காரு. அவருடைய இசையைப் பற்றி உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும்.

இயக்குநர் அட்லிக்கும் எனது நன்றி. இந்தப் படத்துக்காக 7 மாதம் வொர்க் பண்ணிட்டுத்தான் படத்தைத் துவக்கியிருக்காரு. அவர் இயக்குநர்கள்ல சிறந்தவர். ஒவ்வொரு இயக்குநரும் தன்னுடைய லெவலை அப்கிரேட் பண்ணிக்கணும். அட்லியும் அது போன்றவர்தான். அவருடைய இயக்கத்தில் இரண்டாவது முறையாக நான் நடித்ததில் எனக்கும் பெருமைதான்..!

ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு இதுதான் முதல் படம். ஆனால் படத்தைப் பார்த்தால் அப்படி தெரியாது. அந்த அளவுக்கு தனது திறமையைக் காட்டியிருக்காரு. இதேபோல படத் தொகுப்பாளர், கலை இயக்குநர் முத்துராஜ் போன்றவர்களும் சிறப்பா பணியாற்றியிருக்காங்க.

mersal-stills-2

படத்தில் என்னுடன் நடித்த ஹீரோயின்ஸ் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேன்ன் மூன்று பேருமே அருமையா நடிச்சிருக்காங்க. படத்தில் என்னுடன் ஒத்துழைப்பு அளித்த அனைத்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.

நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளெல்லாம் இல்லை. ஆனால் சொல்லித்தான் ஆகணும். பிடிச்சிருந்தா யூஸ் பண்ணுங்க. இல்லைன்னா விட்ருங்க.

mersal-stills-5

நம்மைச் சுற்றிலும் நெகட்டிவ்ஸ் எனப்படும் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதையைல்லாம் விட்டு விலகி இருக்கிறதுதான் சரியா இருக்கும். அதைவிட்டுட்டு நம்ம சக்தியை செலவழிச்சு கத்தி, கத்திக் கூப்பாடு போட்டு.. ரியாக்ஷனை காட்டிட்டு… எதுக்கு இந்த தேவையில்லாத போராட்டம்.. வேண்டாம் நண்பா. விட்ருங்க..

அழகும், ஆடம்பரமும் இருந்தால் ஆயிரம் பேர் பழகுவார்கள். ஆனால் அன்பு இருந்தால் பழகுகின்ற பத்து பேரும் நமக்கு உண்மையாக இருப்பார்கள். எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஆனால் அதை புறக்கணியுங்கள்ன்னு சொல்றேன்.

நாம நம்ம வேலையை பார்ப்போம்.. ஆனாலும், அத்தனை எளிதாக நம்மை வாழ விடமாட்டார்கள். நம்ம கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். பிரஷ்ஷர் இருக்கத்தான் செய்யும். எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள். எதிரிகளே இல்லைன்னா வாழ்க்கை போரடிச்சிரும் நண்பா. எதிரிகள் இருந்தால்தான் நமக்கும் வாழ்க்கை ஜாலியா இருக்கும்.

mersal-stills-4

என்னுடைய இந்த 25 வருட வாழ்க்கைல நான் நிறைய லாபம், நஷ்டம், ஹிட், பிளாக் பஸ்டர் ஹிட்டுன்னு எத்தனையோ பார்த்திருக்கேன். இருந்தாலும் நான் சம்பாதிச்சிருக்கிறதா நினைக்கிறது உங்களை மட்டும்தான்.

ஒரு குட்டிக் கதை சொல்றேன். என்னடா இவனுக்க வேற வேலையே இல்லையான்னு நினைக்காதீங்க. உங்களுக்கு யூஸ்புல்லா இருந்தால் எடுத்துக்குங்க. இல்லைன்னா விட்ருங்க.. ஏன்னா நான் உங்ககிட்ட மட்டும்தான் இது மாதிரி பேச முடியும்.

படத்துல இல்லைன்னாலும் உங்களுக்காக ஒரு பன்ச் டயலாக் சொல்றேன்.. துப்பாக்கினா தோட்டா இருக்கும். கத்தினா கூர்மை இருக்கும். ரவுடின்னா தெனாவெட்டு இருக்கும். மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கும்…” என்றார் முத்தாய்ப்பாக..!

நிகழ்ச்சியில் வைஷ்ணவ் கிரிஷ் என்ற இளைஞர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை ஆண் குரல், பெண் குரல் இரண்டிலுமாக மாறி மாறி பாடி அசத்தினார்.

இதேபோல் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளையும், உடன் நடித்தவர்கள், இயக்குநர்களின் பெயர்களையும் மனப்பாடமாகச் சொல்லி விஜய் ரசிகர்களை அசர வைத்தார்.

Our Score