full screen background image

சொகுசு கார் வழக்கு-தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் விஜய்

சொகுசு கார் வழக்கு-தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் விஜய்

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

2012-ம் ஆண்டு நடிகர் விஜய் தான் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடந்து முடிந்து கடந்த வாரம்தான் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தான் வெளியிட்ட தீர்ப்பில் ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடாமலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, மனுதாரர் பிரபல திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.

திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ வேண்டும். வரி வருமானம், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது வருமானம் ஈட்டக் கூடியவர்கள் கட்டாயமாக நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் செலுத்தும் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகர்கள் நாட்டை ஆளும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். மனுதாரர் தனக்கு பெருமை சேர்க்க வேண்டும்என்பதற்காக உலகப் புகழ்பெற்ற சொகுசு காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். ஆனால் அதற்கு வரி செலுத்தவில்லை என்பது பெருமை தரக் கூடியதல்ல.

வரி செலுத்த மறுத்து தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. லட்சோபலட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜவாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் அவர்களை ரீல் ஹீரோக்கள் என நினைத்துவிடுவர். யார், குறித்த நேரத்தில், முறையாக வரியை செலுத்துகிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோக்கள்.

நடிகர்களுக்கு திரைப்படம் மூலமாகக் கிடைக்கும் பணம் ஒன்றும் வானத்தில் இருந்து தானாகக் கொட்டவில்லை. ஏழை, எளியவர்கள் ரத்தம் சிந்தி, கடின உழைப்பின் மூலமாக சம்பாதித்த பணத்தைக் கொடுத்து பார்க்கும் திரைப்படங்களின் மூலமாக கிடைத்த தொகையில் இருந்துதான் அவர்கள் வசதி வாய்ப்பாக உள்ளனர். அந்த தொகை மூலமாக, தான் வாங்கிய காருக்கு மனுதாரர் வரி செலுத்த மறுப்பது சரியல்ல.

ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மனுதாரர் தனது திரைப்படங்களில் லஞ்சத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக தன்னை பிரதிபலிக்கும் அதேநேரத்தில் இதுபோல வரி ஏய்ப்பில் ஈடுபடுவது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அவ்வாறு வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம்.

எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டு நடிகர் விஜய் தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளும் உலா வந்தன. விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துகள் பதியப்பட்டன.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் திங்கள்கிழமையான ஜூன் 19-ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தான் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த மனுவில் விஜய் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Our Score