தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு 3 சுப்பையாக்களை நன்கு தெரியும். ஒருவர் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சுப்பையா.. மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்.. எப்போதோ காலமாகிவிட்டார்..
இவருக்குப் பின்பு மிக நீண்ட காலத்திற்குப் பிறகு 1985-களில் இரண்டு சுப்பையாக்கள் தமிழ்ச் சினிமாவின் டைட்டில்களில் தவறாமல் இடம் பிடித்தார்கள். ஒருவர் வெள்ளை சுப்பையா. இன்னொருவர் கருப்பு சுப்பையா..
இவர்கள் இருவருமே கவுண்டமணியின் ஆஸ்தான காமெடி டீமில் ஒரு அங்கம்.. கிட்டத்தட்ட 20 ஆண்டு கால கவுண்டமணியின் ராஜாங்கத்தில் இவர்கள் இடம் பெறாத படங்களே இ்லலை.. அந்த அளவுக்கு ஒரு படம்விடாமல் அவருடன் நடித்திருந்தார்கள்.
கருப்பு சுப்பையா சில ஆண்டுகளுக்கு முன்பாக காலமாகிவிட்டார். மிஞ்சியிருப்பவர் வெள்ளை சுப்பையாதான்..
இவரது முகம் தமிழகத்தில் இன்றைக்கும் மிகவும் பிரபலம்.. ஒரேயொரு காரணம்.. ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகங் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதுடி’ என்ற பாடலில் தனி ஆக்டராக ஆடி பாடி நடித்திருந்தார்.
இப்போது அவருக்கு வயது 74. தமிழ்த் திரைப்படங்கள் கிராமக் கதைகளைவிட்டுவிட்டு எப்போது வேறு பாதைக்கு போகத் திரும்பியதோ அன்றிலிருந்து இவரை மாதிரியான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இறங்கு முகம்தான்.. வீ.சேகரின் ஆஸ்தான கம்பெனி நடிகர்.. அவருடைய படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது வந்துவிடுவார்.. இப்போது கம்பெனி, க்ம்பெனியாகச் சென்றும் வாய்ப்பு கேட்க முடியவில்லை..
முன்பெல்லாம் ஸ்டூடியோக்களில்தான் அதிகம் ஷூட்டிங் நடைபெறும். இப்போது வேறு, வேறு இடங்களில் நடந்து கொண்டிருப்பதால் காலமும், நேரமும் அலையும் வாய்ப்பும் இல்லாமல் சோர்ந்து போனார்..
சென்னையிலேயே வாய்ப்பில்லாமல் கிடப்பதற்கு சொந்த ஊருக்கே போகலாம் என்றெண்ணி தனது சொந்த ஊரான கோவை மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காட்டூருக்கே சென்று செட்டிலாகிவிட்டாராம்..!
விதி எங்கே சென்றாலும் துரத்தி வரும் என்பார்களே.. அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.. இத்தனை நாட்களாக சென்னையில் இருக்கும்போதெல்லாம் வராத கேன்சர் நோய் அங்கே போனவுடன் இவரைத் தாக்கியிருக்கிறது. இதுவரையில் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து அந்த கேன்சர் கட்டியை ஆபரேஷன் செய்து அகற்றியிருக்கிறார். மேற்கொண்டும் சிகிச்சை செய்து வருகிறாராம்..!
சென்னைக்கு படையெடுத்து வந்து உடன் நடித்தவர்களிடமும் திரையுலக பிரபலங்களிடமும் பணம் கேட்டு அலைய முடியாத சூழலில் கோவை மாவட்ட ஆ்ட்சித் தலைவரிடம் தனது குடும்பச் சூழலைச் சொல்லி அரசு உதவி கேட்டு மனு கொடுத்திருக்கிறாராம்..
நடிகர் சங்கத்தில் இவர் உறுப்பினர் என்றே நினைக்கிறோம். சென்ற வருடம் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இவர் கலந்த கொண்ட நினைவிருக்கிறது. நடிகர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவியையும், மருத்துவக் காப்பீட்டு உதவியையும் செய்து வருகிறது..!
இவர் விரும்பினால்.. சென்னை வந்தால் அவைகள் நிச்சயம் இவருக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.. பார்க்க ஆளில்லை என்பதால் வர முடியாத சூழல் என்றால் ஒரு முறை வந்து முடிந்த மட்டும் வேண்டியவைகளை நடிகர் சங்கத்திடம் பேசி வாங்கிச் செல்வது அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது..!
கோடி, கோடியாக பணம் புழங்கும் இந்த சினிமா துறையில் அன்றாட கூலித் தொழிலாளிகளின் நிலைமை கடைசி காலத்தில் இப்படித்தான் இருக்கும்.. அது நடிப்பு கலைஞர்களாக இருந்தாலும் சரி.. தொழில் நுட்ப கலைஞர்களாக இருந்தாலும் சரி..!