இயக்குநர் சேரனின் C2H Network நிறுவனத்தின் அறிமுக விழாவில் இயக்குநர் சீமான் பேசியதில் சில பகுதிகள் இங்கே :
“இப்போதெல்லாம் விருதுகள் கொடுப்பதில்கூட அரசியல் நுழைந்துவிட்டன. ‘சிறந்த இயக்குநர்’ என்று ஒருவருக்கு விருதளிக்கிறார்கள். ஆனால் அவர் இயக்கிய படம் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்காது. வேறொருவர் இயக்கிய படத்திற்குத்தான் சிறந்த திரைப்படத்திற்கான விருதை அளிப்பார்கள்.
சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத்தின் இயக்குநருக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை அளிக்க மாட்டார்கள். வேறொரு திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்குத்தான் அதனைக் கொடுத்திருப்பார்கள். இது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் பாருங்கள்..?
அப்படியானால் சிறந்த இயக்குநர் இயக்கிய படம் சாதாரண படமா..? அல்லது ஒரு சாதாரண படத்தை இயக்கியவருக்கு சிறந்த இயக்குநருக்கான விருதா..? ஒரே குழப்பமாக இருக்கிறது..!
இப்போதெல்லாம் சினிமா எடுப்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.. எத்தனை கோடியில் திரைப்படம் எடுத்தாலும் மேலும் சில கோடிகள் கொடுத்து விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது.. ‘அங்காடி தெரு’, ‘மதராசப்பட்டிணம்’ போன்ற படங்கள் வந்த வேகத்திலேயே சென்றுவிட்டன.. இதற்கான அங்கீகாரம் தமிழக மக்களிடம் கிடைக்கவே இல்லை.. மக்கள் கண் பார்வைக்கு அதிகமாக இந்தப் படங்கள் செல்லவில்லை.
ஒரு வாரத்திலேயே படத்தைத் தூக்கிவிடுகிறார்கள். அந்த ஒரு வாரத்தில் படத்தை பற்றிய தாக்கம் மக்களிடையே பரவி.. நாளைக்கு பார்க்கலாம் என்றெண்ணியிருக்கும் சூழலில் பார்த்தால், தியேட்டரில் அந்த படம் இருக்காது.. அவ்வளவுதான்.. என்றைக்காவது தொலைக்காட்சியில் போடும்போது பார்க்கலாம் என்று விட்டுவிடுகிறார்கள் மக்கள்.
கூடவே இந்தத் திருட்டு டிவிடி என்னும் அறிவுத் திருட்டும் அமோகமாக நடைபெற்று வருகிறது.. எந்தத் திருட்டையும்விட அறிவுத் திருட்டு என்பது மகா அயோக்கியத்தனம்..
நாம் என்னதான் சொன்னாலும், செய்தாலும், எதிர்த்தாலும் அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த்த் திருட்டு டிவிடி தொழிலை முற்றிலும் தடுக்க முடியும். ஆனால் அரசுகள் செய்வதில்லை.. கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில் இது போன்று புதிய படங்களின் டிவிடிக்களை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் அதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்கள். நாம்தான் இத்தனை அலட்சியமாக இருக்கிறோம்.
இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்தான் ஆண்டு வருகிறார்கள்.. சினிமாக்காரனுக்கு வீடு தர மாட்டார்கள்.. கல்யாணத்திற்கு பெண் தர மாட்டார்கள்.. கடன் தர மாட்டார்கள்.. இப்படி பல வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டவர்கள் திரைத்துறையினர்.. வாழ்வதற்கு வீடுகூட கிடைக்காத இந்தத் துறைதான், இந்த மாநிலத்தை வழி நடத்தும் ஆட்சியை நடத்துவதற்கு வரிசையாக ஆட்களைக் கொடுத்திருக்கிறது..! இருந்தும் நமக்கென்ன பயன்..?
நான் இந்த அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். என் அப்பா பாரதிராஜா போன்ற பெரிய கலைஞர்களை அரசு தத்தெடுத்துக் கொள்ளவேண்டும். மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம் தந்து தமிழகத்தின் கலை, கலாச்சார பெருமையை சொல்லும்படியான படங்களை தயாரிக்கும் வேலையை அவர்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த மண்ணின் பண்பாடு, கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் வேலையை அரசு இப்படி திரைத்துறையினர் மூலமாக செய்ய முன் வர வேண்டும்..!
இந்த திருட்டு டிவிடி பிரச்சனையில் இருந்து மீள அப்பா பாரதிராஜா மாதிரி பெரியவர்கள் கலந்து பேசி என்ன பண்ணணும்னு எங்ககிட்ட சொன்னா போதும். செய்து முடிக்க நாங்கள் தயார்.. ஏன்னா அவர் சொன்னா சாகவும் தயாரா இருக்கோம்; சாகடிக்கவும் தயாரா இருக்கிறோம்…” என்றார் சீமான்.