கடந்த வெள்ளியன்று வெளிவந்த ‘வைகைப்புயல்’ வடிவேலு நடித்த ‘எலி’ திரைப்படத்தை பார்த்த சினிமா விமர்சகர்களில் பெரும்பாலோர் ‘படத்தில் அப்படியொன்றும் பெரிய அளவுக்கு நகைச்சுவை இல்லையே..?’ என்கிற ரீதியில்தான் விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார்கள்.
இதையே பொறுக்க மாட்டாமல் அண்ணன் வடிவேலு இன்றைக்கு பொங்கியெழுந்து இணையத்தள சினிமா விமர்சகர்களை ‘நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள்’ என்றும், ‘சைக்கோ’, ‘சேடிஸ்ட்’ என்றும் குறிப்பிட்டே தாக்கியிருக்கிறார்.
திடீர்ன்னு அண்ணனுக்கு என்னாச்சுன்னு தெரியலை.. ஏதோ வேண்டுமென்றே விமர்சனங்கள் இப்படி வந்திருப்பதாக நினைத்து பேசியிருக்கிறார்.
பாராட்டும்போது ஏற்றுக் கொள்ளும் மனது, விமர்சனம் செய்யும்போது மட்டும் ஏற்க மறுப்பதேன்..? அதுவும் ஒட்டு மொத்தமாக அனைவருமே விமர்சித்து எழுதியிருக்கும்போது தவறுகள் எங்கோ தங்களுக்குள் இருக்கிறது என்பதை புரிந்து ‘அடுத்த படத்தில் அதனை சரி செய்துவிட்டு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால் அண்ணன் வடிவேலுவை பாராட்டலாம்..!
நியாயமான விமர்சனங்களை புரிந்து கொள்ளாமல், இப்படி அநியாயமாக பேசுவது நல்ல கலைஞனுக்கு அழகல்ல..!
அவருக்கு யாராவது புரிய வைத்தால் புண்ணியம் கிடைக்கும்..!