வருமான வரித்துறையை எதிர்த்த நடிகர் சூர்யாவின் வழக்கு தள்ளுபடி

வருமான வரித்துறையை எதிர்த்த நடிகர் சூர்யாவின் வழக்கு தள்ளுபடி

நடிகர் சூர்யா வருமான வரித்துறை மீது கொடுத்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆண்டுதோறும் வருமான வரியைக் கட்டுவதில் பெரும் பணக்காரர்களுக்கு சில பிரச்சினைகள் உண்டு. சில வரிகளைக் கூட்டுவதிலும், கழித்துக் கணக்குக் காட்டுவதிலும் அவர்களது ஆடிட்டர்களுக்கே குழப்பம் ஏற்படும்.

வருமான வரியைக் கட்டிய பிறகும், இதைவிட அதிகமாகவே உங்களுக்கு வருமானம் வந்திருக்கிறது. எனவே கூடுதல் வரியைக் கட்டுங்கள் என்று வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். இதை எதிர்த்து அவர்களும் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவார்கள். இது மிகவும் வழக்கமான ஒன்று. இது போன்ற ஒரு நிலைமை நடிகர் சூர்யாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008-ம் ஆண்டு மற்றும் 2008-2009 ஆண்டுகளுக்கான சூர்யாவின் வருமான வரியை மறு மதிப்பீடு செய்து 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வருமானவரித் துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும்  மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2007-08, 2008-09 ம் ஆண்டுகளுக்கான வருமான வரியாக 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை நடிகர் சூர்யா செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரி சட்டப்படி இந்த வரிக்கான மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார்.

தான் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தீர்ப்பாய கால தாமதத்திற்கு வருமானவரித் துறையே காரணம் என்பதால் வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சூர்யா தாமதமாகத்தான் கணக்கை தாக்கல் செய்தார் எனவும், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டியில் இருந்து விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லையென வருமான வரி தரப்பில் வாதிடப்பட்டது.

வருமானவரித் துறையின் இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் (ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில் தீர்ப்பளித்தவர்) நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 
Our Score