முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியு திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.
இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும்.
இந்தக் குட்லக் ப்ரிவியு திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திருமதி ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் திரைப்படங்களைப் பார்த்து ரசித்துள்ளனர்.
மிகவும் புகழ்மிக்க அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம்தான், இபொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது.
இதனை முன்னணி இயக்குநரான ஹரியும், அவரது மனைவி ப்ரீதா ஹரியும் இணைந்து துவக்கியுள்ளனர்.
திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் இந்தப் புதிய குட்லக் ஸ்டூடியோவின் திறப்பு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இந்தப் புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம். அப்பாவு, தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.
இந்தத் துவக்க விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் மாண்புமிகு எம்.அப்பாவு, தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பி.கே.சேகர் பாபு, மாண்புமிகு டி.மனோ தங்கராஜ், இயக்குநர் ஹரியின் தந்தையான கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனாரான நடிகர் விஜயகுமார், ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றினார்கள்.
மற்றும் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ்.முருகராஜ், கார்த்திக் சந்தானம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஶ்ரீதர், நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குநர் கார்த்திக் ராஜா, இயக்குநர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஶ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.