“கவுண்டமணி தி கிரேட்..” – சிலிர்க்கிறார் நடிகர் செளந்தர்ராஜா

“கவுண்டமணி தி கிரேட்..” – சிலிர்க்கிறார் நடிகர் செளந்தர்ராஜா

தனது செகண்ட் இன்னிங்சில் ‘49-ஓ’ படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு ‘காமெடி கிங்’ கவுண்டமணி நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.

ஜெயராம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில்  தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து  வருகிறார் நடிகர் சௌந்தர்ராஜா.

‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்த சௌந்தர்ராஜாவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட புகழ் ரித்விகா நடிக்கிறார்.

‘காமெடி கிங்’ கவுண்டமணியுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொள்ளச் சொன்னால் கண்களை அகல விரித்து பிரமிப்பு காட்டுகிறார் சௌந்தர்ராஜா.

“கவுண்டமணி சார் எந்த டயலாக்கையும் படிக்கமாட்டார். துணை இயக்குநரிடம் இரண்டு, மூன்று முறை வாசிக்கச் சொல்லி கேட்பார், அப்புறம் நேரடியா ‘டேக் போலாம்’ணு சொல்லிடுவார். ஒரே டேக்ல ஓகே பண்ணுவார். இத்தனைக்கும் பேப்பர்ல இருந்த டயலாக்ல ஒண்ணுகூட மிஸ் ஆகாது. அது எத்தனை பக்கமா இருந்தாலும்..! இதான் கவுண்டமணி சார் ஸ்டைல். அவரோட இந்த அசாத்திய திறமைதான், அவர்  இவ்ளோ பெரிய இடத்தில் இருக்கக் காரணம்னு நான் நினைக்கிறேன்.

அப்பேர்ப்பட்ட திறமைக்காரர் முன்னாடி நான் பண்ணுன கூத்தைக் கேட்டா உங்களுக்கும் கோபம் வந்தாலும் ஆச்சர்யமில்ல.

ஒரு சீன்ல, கவுண்டமணி சார்கூட, நானும் ரித்விகாவும் நடிச்சோம். காட்சிப்படி கவுண்டமணி சார் எங்களைப் பத்தி ரொம்ப நக்கலாப் பேசுவாரு. அதைக் கேட்டு, நான் சீரியஸா, செம கோபத்துல அவரை பார்த்து முறைக்கணும். இதுதான் சீன்.

கவுண்டமணி சார் டயலாக் பேசுறப்போ, நான் அவர் வாயையே பார்த்துக்கிட்டிருந்தேன்.  அவர் பேசின பேச்சை ரசித்ததுல, அவர் மேல எனக்கு கோபம் வர்ற மாதிரி நடிக்கவே முடியல. பட்டுபட்டுன்னு சிரிச்சிட்டேன். இதே கூத்துதான் தொடர்ந்து சில டேக்குகள்லயும் நடந்தது. 

நான் அடிச்ச இந்தக் கூத்துல கவுண்டமணி ஸார் லேசா சீரியஸாகுற மாதிரி எனக்குள்ள தோணிச்சு. அப்புறம் நான் சுதாரிச்சிக்கிட்டு,  ‘அண்ணே, மன்னிச்சிருங்கண்ணே, இந்த தடவை சொதப்பாம நடிக்கிறேன்’னு சொன்னேன். தட்டிக் கொடுத்து ‘அசத்துப்பா’ன்னு சொன்னார். அதுக்கப்புறம்தான் அந்த டேக் ஓகே ஆச்சு. நிஜமாவே கவுண்டமணி சார்கூட நடிச்சது எனக்கு மிகப் பெரிய அனுபவம்..” என அனுபவித்து சொல்கிறார் சௌந்தர்ராஜா.

‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் தவிர விஜயசங்கர் இயக்கும் ‘ஒரு கனவு போல’ படத்தில் இராமகிருஷ்ணனுடன் இரண்டு  கதாநாயகர்களில் ஒருவராகவும் நடிக்கிறார் சௌந்தர்ராஜா. சர்ப்ரைஸ் செய்தியாக அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்திலும் ‘இளைய தளபதி’ விஜய்யுடன் நடித்து கொண்டிருக்கிறார். 

“இந்த 3 படங்களும் என்னோட சினிமா பயணத்தில் கண்டிப்பாக திருப்புமுனையாக இருக்கும்…” என நம்பிக்கையோடு சொல்கிறார் நடிகர் சௌந்தர்ராஜா. 

Our Score