மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சிவக்குமார், “கே.பி.யின் படங்களை பொக்கிஷம் போல.. ஆவணப் படங்களை போல பாதுகாக்க வேண்டும். இந்தப் பணியை கமல், ரஜினி இருவரும் முன்னின்று நடத்த வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.
‘‘60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடக மேடை, சினிமாவில் இயக்குனராக, இமயமாக வாழ்ந்த மாமனிதர் அவர். கே.பி. சார் சாதித்ததை இனி வேறு எவராலும் சாதிக்க முடியாது.
பலரும் நினைப்பது போல அவர் பரம்பரை கோடீஸ்வரர் இல்லை. ஒரு சாதாரண கிராம முன்சீப்பின் மகன். அவரது வீட்டில் அனைவரும் ஒரே பாயில்.. ஒரே போர்வையை போர்த்திக் கொண்டுதான் படுக்க வேண்டும். தனக்கென்று ஒரு தனி பாய், தனி போர்வை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் கே.பி.யின் முதல் லட்சியமாக இருந்தது..
அதற்காகத்தான் உழைத்து படித்து நாடக மேடைக்கு வந்து அதன் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்து சாதனை படைத்தவர்.
ரஜினி, கமல், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதா, சரிதா, ஸ்ரீப்ரியா, பிரகாஷ்ராஜ், விவேக் என கிட்டத்தட்ட 65 பேருக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் கே.பி.அவர்கள்.
அவர் இயக்குனராக, வசனகர்த்தாவாக, நடிகராக கிட்டத்தட்ட 106 படங்களில் பங்கேற்றிருக்கிறார். அதில் அவர் தனக்கு மிகவும் பிடித்த படங்களை குறிப்பிடும்போது 5 படங்களைத்தான் குறிப்பிடுவார். அப்படி அவருக்கு பிடித்த அந்த 5 படங்களில் நான் நடித்த 3 படங்கள் இருக்கு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு. கமல், ரஜினிக்கு முன்பே அவரது முதல் ஹீரோ நாகேஷ்தான்!
எல்லோரும் யார்கிட்டயாவது உதவி இயக்குனராக இருந்து தான் படங்களை இயக்க வருவார். ஆனால் கே.பி. அவர்கள் நேரடியாக இயக்குனரானவர்.
பிராமண சமூகத்தில் பிறந்த கே.பி., பிராமண பெண்மணி ஒருவர் விபச்சாரம் செய்கிறார் என்று ‘அரங்கேற்றம்’ படத்தை எடுத்தார். இந்த படத்தை எடுத்ததற்காக தமிழகத்தின் அத்தனை பிராமண சமூகத்தினரின் எதிர்ப்புகளுக்கும் ஆளானார் கே.பி.
அந்தப் படம் எடுத்த சமயத்தில் அவர் சத்தியம் பண்ணினார். ‘இனி நான் உயிரே போனாலும் சிகரெட் குடிக்க மாட்டேன்.. பிசியான நடிகர்களை வைத்து படம் எடுக்க மாட்டேன். படத்தில் ஏதாவது ஒரு நல்ல செய்தியை சொல்ல வேண்டும்’ என்று..!
பல்லாயிரம் ஆண்டு காலமாக ஆணாதிக்கம் இருந்து வரும் இந்த உலகத்தில், இனி பெண்களை போற்றும் படங்களைத்தான் எடுப்பேன் என்று சத்தியம் செய்த கே.பி. பெண்களை போற்றும்படி எடுத்த படங்கள்தான் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘அவர்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மனதில் உறுதி வேண்டும்’ போன்றவை..! அப்படிப்பட்ட படங்களை எடுத்த கே.பி.யை போன்று இனி யாரும் இந்த உலகில் வரப் போவதில்லை.
அவர் இயக்கிய படங்களில் 50 படங்களை இனி யாராலும் எடுக்க முடியாது. அது சம்பந்தமாக நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
அது என்னவென்றால் கமலும், ரஜினியும், இந்த சினிமா உலகமும் சேர்ந்து அவர் இயக்கிய படங்களில் தரமான அந்த 50 படங்களை எப்படியாவது ஆவணப் படங்களாக பாதுகாக்க வேண்டும் என்பதுதான்..!
என்றைக்குமே கே.பி. அவர்கள் நம்மிடமிருந்து போகமாட்டார். அவர் தனது படங்கள் மூலம் இந்த உலகில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்’’ என்றார்.