full screen background image

“காசும் போச்சு; படமும் போச்சு; காதலியும் போயிட்டா” – நடிகர் சிம்புவின் புலம்பல்..!

“காசும் போச்சு; படமும் போச்சு; காதலியும் போயிட்டா” – நடிகர் சிம்புவின் புலம்பல்..!

இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு,  தன்னுடைய பழைய காதலையும், காதலியையும் பற்றி தேவையில்லாமல் பேசி திரும்பவும் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.  

கடந்த இரண்டாண்டுகளாக எந்தவொரு பட விழாவிலும் கலந்து கொள்ளாலும், தான் நடித்த படங்களை திரைக்கு வராமலும் செய்து சாதனை படைத்திருக்கும் நடிகர் சிம்பு, ‘நல்லது செய்தால் அதுதான் நம்மைத் தக்க நேரத்தில் காப்பாற்றும்’ என்ற தத்துவத்தை இந்த இரண்டரையாண்டு காலத்தில் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சிம்பு பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“கடந்த ரெண்டு வருசமா என் படம் எதுவுமே திரைக்கு வராததால ரொம்ப கஷ்டப்பட்டேன். இந்த 2 வருஷமா நான் எந்த சினிமா விழாவுலயும் கலந்துக்கிட்டதும் இல்ல. கடைசியா ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட விழாவுக்குத்தான் வந்திருந்தேன். இப்போ இந்தப் படத்துக்கு..

‘மன்மதன்’ படத்துல சந்தானத்தை நான்தான் அறிமுகப்படுத்தினேன். ‘அறிமுகப்படுத்தினேன்’னு சொல்ல மாட்டேன். அவரோட திறமையை அங்கீகரித்தேன். அதுதான் உண்மை.

இப்போகூட நிறைய பேர் கேட்டுக்கிட்டேயிருக்காங்க. ‘என்ன ஸார். நீங்க அறிமுகப்படுத்தின சந்தானம் எங்கயோ போயிட்டாரு?’ன்னு.. அவருக்குத் திறமையிருக்கு. முன்னுக்கு போயிட்டாரு.

டிவில நடிச்சவராச்சேன்னு நான் நினைக்காம ‘மன்மதன்ல’ நடிக்க வைச்சதுக்கு காரணமே அவரோட திறமை மேல எனக்கிருந்த நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை இப்போ வீண் போகலை..! ஆனாலும் இன்னமும் என்னை மறக்காமல் இருக்காரு. அதுக்கு அவருக்கு தனியா நான் நன்றி சொல்லிக்கிறேன்.

நான் சந்தானத்தின் திறமையை அங்கீகரித்து நாளைக்கு அவர் பெரிய நடிகரா வருவார்ன்னு நினைச்சு நடிக்க வைச்சேன். ஆனா எனக்கு அந்தத் திறமைகூட இல்லை. என்னை ஒரு நடிகனா உருவாக்கினது எங்கப்பாதான். எங்கப்பா இல்லைன்னா நான் இல்லை. இதை நான் எங்க வேண்ணாலும் சொல்வேன். எங்கப்பாதான் என்னை உருவாக்கியிருக்கார்.

என் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாச்சு. இந்த இரண்டு வருடங்களில் நான் நிறைய கத்துக்கிட்டேன். சில பேர் எழுதியிருந்தாங்க நான் ஆன்மீகம் பக்கம் போயிட்டேன்னு. கடவுளைத் தேடித்தானே போனேன். பிகரைத் தேடி போகலியே..?

மக்கள் அனைவருமே கஷ்ட காலத்தையும் கொஞ்சம் அனுபவிச்சிருப்பாங்க. நான் எந்தக் கஷ்டமும் அனுபவிக்காமல் வளர்ந்துட்டேன்னு பலரும் நினைக்கலாம். ஆனால்  சாதாரண மனுஷங்க படுற கஷ்டத்தையெல்லாம் இந்த இரண்டரை வருஷத்துல நான் பார்த்துட்டேன்.

இந்த ரெண்டரை வருஷத்துல எல்லாமே என் கையைவிட்டுப் போய்விட்டது. நான் சம்பாதித்தால் காசை அம்மாகிட்டதான் கொண்டு போய் கொடுப்பேன். இப்போ கைல காசில்லாமல் அம்மாகிட்ட போய் கேக்க கஷ்டமா இருந்தது.

காசும் போச்சு.. படமும் போச்சு.. சரி.. நமக்காக ஒரு பொண்ணு இருக்கா. அவளாச்சும் இருப்பாள்ன்னு நினைச்சேன். அவளும் போயிட்டா. கல்யாணமாகி குடும்பம்ன்னு ஒண்ணு வந்து, குழந்தை பிறந்தால் அதோட சிரிப்பை பார்த்துட்டா நம்ம கஷ்டம் போயிரும்ன்னு நினைச்சேன். இப்போ அதுவும் போய் கடவுள் என்னை ரொம்பவே சோதிச்சிட்டார்.  

இப்போ எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருக்கு. ஏதோவொரு காரணத்துக்காக இந்த உயிர் மட்டும் இருக்குன்னு நினைக்கிறேன். எவ்வளவு கஷ்டங்களை நான் கடந்து வந்தாலும் என்னோட ரசிகர்கள் என்னைத் தாங்கிப் பிடிக்கிறாங்க. தூக்கி நிறுத்துறாங்க.

ஒரு படம்கூட வெளியாகாத நிலைல பத்திரிகையாளர்கள் மட்டும் என்னைப் பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால திரையுலகில் என்னால தாக்குப் பிடிக்க முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இல்லேன்னா காணாமலே போயிருப்பேன். அவங்களுக்கு எனது நன்றி.

இந்த நேரத்தில்தான் திடீர்ன்னு கௌதம் மேனன் என்னை நடிக்க அழைத்தார். கதை கேட்டேன். பிடிச்சிருந்த்து. பண்ணலாம்ன்னு ரெடியானோம். அந்த நேரத்துல திடீர்ன்னு அஜித் ஸார் பட வாய்ப்பு வந்ததால் என் படத்தை நிறுத்திட்டு அஜித் படத்தை எடுக்கப் போயிட்டார். திரும்பவும் கடுமையான மன உளைச்சலா ஆயிருச்சு. அப்போ அஜித் ஸாரே என் அப்பாவிற்கு போன் பண்ணி ‘கவலைப்படாதீங்க.. உங்க பையன் பெரிய ஆளா வருவான்’ன்னு சொன்னார்.

எனக்கு கெளதம் மேன்ன் ஸார் மேல ரொம்ப மரியாதை இருக்கு. ஏன்னா ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துல என்னை அவர் நடிக்க வைக்கும்போது நிறைய பேர் அவர்கிட்ட ‘சிம்புவையா நடிக்க வைக்கப் போறீங்க?’ன்னு கேவலமா பேசியிருக்காங்க. ஆனா அவரோ எல்லாத்தையும் கேட்டுட்டு சிம்பு மேல எனக்கு நம்பிக்கையிருக்குன்னு சொல்லி என்னை நடிக்க வைச்சார். அதை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்.

‘வாலு’ படம் மே 9-ம் தேதி ரிலீஸாக வேண்டியிருந்தது. ரிலீஸாகலை. இந்தப் படத்துக்கு போன மாசத்துல இருந்தே ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு பின்பு தள்ளிப் போட்டுக்கிட்டே போறாங்க. தயாரிப்பாளருக்கு நிறைய பிரச்சினைகள். அவராலும் ஒண்ணும் செய்ய முடியலை. கடவுள் நம்மளை கை விட்டுட்டாரேன்னு நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தேன். இந்த நேரத்துலத்ன் எங்கப்பா அந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணப் போறாரு.

இந்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தை இயக்கியிருக்கும் முருகன் ஆனந்த் என்ற இரட்டையர்கள் இரண்டு பேருமே ஒற்றுமையா ‘முருகானந்த்’ன்னு பேர் போட்டிருக்காங்க. எவ்ளோ பெரிய விஷயம் பாருங்க. இது ஒண்ணுக்காகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்ன்னு நம்புறேன்.

இந்த இரண்டரை வருஷத்துல ஒரு விஷயத்தை நான் தெளிவா உணர்ந்துட்டேன். அது நாம செய்ற நன்மைகள்தாங்க நம்மை காப்பாத்தும். அதுனால நாம நமக்காக வாழுறதைவிடவும் மற்றவர்களுக்காக வாழ்ந்தாலே நாம நல்லாயிருப்போம்..” என்று கழிவிரக்கமாகவும், உருக்கமாகவும் பேசினார் சிம்பு.

எல்லாஞ் சரிதான். அதான் காதலே வேணாம்ன்னு அந்தப் பொண்ணு போயிருச்சே. இப்பவும் ஒரு பொது மேடைல அதைப் பத்தி பேசி, முன்னாள் காதலியை அவள், இவள்ன்னு ஏக வசனத்தில் பேசணுமா என்ன..?

Our Score